சூர்யாவுக்கு பதில் கவின்? சூப்பர் ஹிட் படமாச்சே! செட் ஆகுமா?
சூர்யா நடித்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இப்போது கவின் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று உலாவிக் கொண்டிருக்கிறது.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிளிரும் நட்சத்திரங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடுத்த இடத்தில் கவின் வந்து கொண்டிருக்கிறார். அவரின் பாதையையே பின்பற்றி அவரைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார். 3 படங்களில் நடித்து நல்ல பெயரை சம்பாதித்திருக்கும் கவின் தற்போது 3 படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியுள்ளார்.
கவின் அடுத்ததாக நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். நட்புன்னா என்னனு தெரியுமா எனும் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நிலையில் அந்த படம் பெரிய வெற்றி எதுவும் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து லிஃப்ட் எனும் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
லிஃப்ட் படத்தில் கவினுடன் அம்ரிதா ஐயர் இணைந்து நடித்திருப்பார். மேலும் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடி உதவியிருப்பார். இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்ததாக கவின் இணைந்தது கணேஷ் பாபு எனும் புதுமுக இயக்குநருடன்தான். அந்த படம் கவினின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது.
கவினுடன் அபர்ணா தாஸ், பாக்யராஜ் என பலர் நடித்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், கவினை ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை தாங்கும் கதாநாயகனாக உருவாக்கியது. இந்நிலையில், ஸ்டார் படத்தில் நடிக்க கவின் ஒப்பந்தமானார். இந்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும்.
இந்த படங்களைத் தொடர்ந்து கவின் தற்போது நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் ப்ளடி பெக்கர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. அடுத்ததாக கிஸ் எனும் திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில்தான், சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்திருந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் அடுத்த பாகமாக புதிய படம் ஒன்று உருவாக இருக்கிறது என்கிறார்கள். இந்த படத்தில் நாயகனாக நடிக்க கவினிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். சில்லுனு ஒரு காதல் படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். இவர்தான் சமீபத்தில் சிம்பு நடிப்பில் உருவான பத்து தல படத்தையும் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் தற்போது கவின் நடிக்கும் 6 வது படத்தை இயக்க கிருஷ்ணா தயாராகி வருவது தெரியவந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu