பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் திடீரென விலகியது ஏன்?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாச் நிகழ்ச்சியை தொடர்ந்து, பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி, டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. விக்ரம் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டியுள்ளதால், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கோவிட் பெருந்தொற்றுப் பரவலும் அதனையடுத்து வந்த லாக்டவுன் விதிமுறைகளும் ஒவ்வொருவரின் அன்றாடத்திலும், திட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பும், பிற தயாரிப்புப் பணிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
பிக்பாஸ் நிகழ்ச்சி என் மனதிற்கு உகந்த, நான் விரும்பிச் செய்கிற ஒன்று. விக்ரம் பணிகள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகப் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டு செயல்பட்டு வந்தோம். பிக்பாஸ் சீசன் 5 வழக்கம்போல சிறப்பான முறையில் நடந்து முடிந்தது.
இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் ஓடிடியில் டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்குக் கிடைத்தது. புதிய புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும், மக்களை மகிழ்விக்கக் கிடைக்கும் எந்தச் சிறிய வாய்ப்பையும் தவறவிடக்கூடாது எனும் என் உத்வேகத்திற்குப் பிக்பாஸ் அல்டிமேட் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது.
லாக்டவுன் விதிமுறைகளால் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதன் விளைவாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்பிடிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியதாகிவிட்டது.
இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வரும் சூழலில் பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது. வேறு வழியின்றி கனத்த மனதுடன், பிப்ரவரி 20-ஆம் தேதி எபிஸோட்டுக்குப் பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது. விரைவில் பிக்பாஸ் சீசன் 6-ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu