படத்தயாரிப்பில் ஒன்றிணையும் கமல் - ரஜினி..!

படத்தயாரிப்பில் ஒன்றிணையும் கமல் - ரஜினி..!
X
தமிழ்த்திரையுலகில் 40 ஆண்டுகளாக பிரிந்து இயங்கி வந்த கமலும் ரஜினியும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள்.

தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து நடிக்காமல் தனித்தனியே நடித்து வந்தனர். தற்போது இருவரும் ஒரு படத்தில் ஒருங்கிணையப் போவதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், நடிப்பில் அல்ல தயாரிப்பில் என்பதுதான் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும்.

முதல்முதலாக ரஜனிகாந்த் தமிழ்த்திரையில் அறிமுகமான படம் கே.பாலசந்தரின் 'அபூர்வராகங்கள்' ஆகும். அப்படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன். ரஜினி நடிக்க வருவதற்கு முன்பே கமல் நாயகனாக நடித்து வந்தார். 'அபூர்வராகங்கள்' படத்தில் அறிமுகமான நாள்முதல் இன்றுவரை கமலும் ரஜினியும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

தொடக்க காலங்களில் 'அபூர்வராகங்கள்', 'மூன்றுமுடிச்சு', 'ஆடுபுலி ஆட்டம்', 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'அவள் அப்படித்தான்', 'நினைத்தாலே இனிக்கும்' உள்ளிட்ட பல படங்களில் இணைந்த நாயகர்களாக கமல் - ரஜினி இருவருமே சேர்ந்து நடித்து வந்தனர்.

ஒரு காலகட்டத்தில் இருவருமே ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான புரிதலோடு பிரிந்து தனித்தனியாகப் படங்களில் நடிக்கத் தொடங்கினர். அவரவர் ரசிகர்களுக்கு இடையே போட்டிகள் இருந்தாலும் இந்த நாயகர்கள் இருவருமே நட்புடன்தான் இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில்தான், கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்கு முன்பாக கமல்ஹாசன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்க ஒரு படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் ஏனோ, சில காரணங்களால் அந்த முயற்சி நின்றுபோனது. அதற்குப் பிறகுதான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க 'விக்ரம்' படம் உருவானது. வெளியானது. அப்படத்தின் இமாலய வெற்றிச் சாதனையைத் தொடர்ந்து, இப்போது மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாம்.

அதன்படி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒரு படத்தை உருவாக்கப் பேசி வருகிறார்களாம். கூடவே, அப்படத்தை கமல்ஹாசனுடன் இணைந்து ரஜினி தயாரிக்க விரும்புவதாகத் தகவல் கசிந்துள்ளது. 'விக்ரம்' படத்தின்மூலம் கமல்ஹாசனுக்கு 300 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது என்கிறார்கள்.

எனவேதான், ரஜினி நடிப்பில் கமல், ரஜினி கூட்டணி சேர்ந்து படத்தைத் தயாரித்தால் அதைவிட அதிகமாக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதால்தான், கமலிடம் தயாரிப்பில் ஒன்று சேர ரஜினி தரப்பு விருப்பம் தெரிவித்துள்ளதாம். எல்லாம் சரியாக ஒன்றுகூடி வந்தால் விரைவில் படத்தின் தயாரிப்பு குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று தெரியவருகிறது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி