கமல் - ரஜினி திடீர் சந்திப்பு! மகிழ்ச்சியான ரசிகர்கள்..!

கமல் - ரஜினி திடீர் சந்திப்பு! மகிழ்ச்சியான ரசிகர்கள்..!
X
கமல் - ரஜினி திடீர் சந்திப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் திடீரென சந்தித்துக் கொண்ட நிகழ்வால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்திய சினிமாவின் டாப் நாயகர்கள் இருவரும் ஒரே இடத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில், பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

த செ ஞானவேல் இயக்கும் கருத்துள்ள படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், ராணா டகுபதி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.


இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் திருவனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட ஷெட்யூல்களுக்கு சென்னை திரும்பியது படக்குழு, தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதே படப்பிடிப்பு தளத்தில்தான் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதனால் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு தளத்தில் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த புகைப்படங்கள்தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.


கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வரை விசாகபட்டினத்தில் படப்பிடிப்பு நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இன்று முதல் படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காலையிலேயே ரஜினிகாந்த் தனது ரஜினிகாந்த் 170 படத்தில் நடிப்பதற்காக பிரசாத் ஸ்டூடியாவுக்கு வந்திருக்கிறார்.

இந்தியன் 2 படத்துக்காக இன்று அதே பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்த கமல்ஹாசன், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக, ரஜினிகாந்துடன் சந்தித்து பேசினார். ரஜினி திடீரென்று முன் வந்து நின்றதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரைக் கட்டியணைத்தார் கமல்ஹாசன்.


இரண்டொரு நிமிடங்கள் பேசிவிட்டு பின் படப்பிடிப்பு தாமதமாகிவிடக்கூடாது என இருவரும் தத்தமது படப்பிடிப்பு தளங்களுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மதியம் உணவு இடைவேளையின்போது இருவரும் சந்திப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில், அதுகுறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இருவரும் ஆரத்தழுவி நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரஜினிகாந்த் ஏற்கனவே படப்பிடிப்பில் இருந்தார் என்பதும், கமல்ஹாசன் அப்போதுதான் வந்தார் என்பதும் அவர்களின் உடை, கெட்டப் பார்த்தபோதே தெரிந்தது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!