/* */

ஏழை தயாரிப்பாளர்களின் எம் ஜி ஆர் என்று வர்ணிக்கப்பட்ட ஜெய்சங்கர் காலமான தினமின்று😢

ஜெய்சங்கரை திரையுலகம் கொண்டாடி மகிழக் காரணம் அவரால் பல தயாரிப்பாளர்கள்,இயக்குநர்கள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டனர்

HIGHLIGHTS

ஏழை தயாரிப்பாளர்களின் எம் ஜி ஆர் என்று வர்ணிக்கப்பட்ட ஜெய்சங்கர் காலமான தினமின்று😢
X

ஏழை தயாரிப்பாளர்களின் எம் ஜி ஆர் என்று வர்ணிக்கப்பட்ட ஜெயசங்கர் காலமான தினமின்று😢

எம்.ஜி.ஆர். போல் கவர்ச்சிகரமான செல்வாக்கு இல்லாதவர், சிவாஜி கணேசனைப் போல் நடிப்பாற்றலில் உச்சங்களைத் தொட்டவரில்லை. அதே காலக் கட்டத்தில் கோலோச்சிய ஜெமினி கணேசனைப் போல் பெண்களை வசியம் செய்ததில்லை. ரவிச்சந்திரனைப் போல் ஸ்டைலிலோ நடனத்திலோ பேர் வாங்கியவரில்லை. ஆனால் இத்தனை குறைகளையும் மீறி ஜெய்சங்கர் என்ற நடிகரை திரையுலகம் கொண்டாடி மகிழக் காரணம் அவரால் பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வாழ்க்கையை வசந்தமாக்கிக் கொண்டனர் என்பதுதான்.

'poor man's MGR என்றும் 'தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட்' என்றும் அவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

நீதிபதியின் மகனாக வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஜெய். சுப்பிரமணியம் சங்கர் என்ற பெயரைத் திரைப்படத்துக்காக ஜெய்சங்கர் என்று மாற்றிக்கொண்டார். இயக்குநரும் நடிகருமாக இருந்த சோவின் விவேகா பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழுவில் பணியாற்றிவந்தவர், 'இரவும் பகலும்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அப்பேர்ப்பட்டவ்ரின் நினைவு நாளையொட்டி ஜெய்சங்கர் மகனும் பிரபல கண் மருத்துவருமான விஜய்சங்கரிடம் நம்ம கட்டிங் கண்ணையா பேசி திரட்டிய நினைவஞ்சலி நம்ம ஆந்தை சினிமா அப்டேட் குழு நண்பர்கள் பார்வைக்கு இதோ:

" லா காலேஜில் படிச்சு வந்த என் அப்பா சினிமா மீது கொண்ட மோகத்தால் சினிமாவில் திடீரெ நடிக்கத் தொடங்கிவிட்டார். திரை உலகில் பெரிய 'ஹீரோ'வாக வலம் வந்தாலும் படிப்பை முடிக்கவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. இதற்காக தனது குழந்தைகள் நன்கு படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அப்பாவோட 100-வது படமான இதயம் பார்க்கிறது என்ற படத்தில் கண் பார்வை இழந்தவர் கேரக்டரில் நடிச்சு இருப்பார். அப்போவே தனது குழந்தைகளில் ஒருவரை கண் டாக்டராக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். நான் கண் டாக்டருக்கு படித்து கண் டாக்டர் ஆனதும் அப்பா என்னை கட்டியணைத்து நான் சினி ஃபீல்டுலே பன்றது ஒன்ணுமே இல்லை. நீ என்னை விட பெரிதாக சாதிச்சுட்டே என்று கூறி சந்தோஷப்பட்டார். அதைப் போல என் தம்பியை என்ஜினீயருக்கும், தங்கையை டாக்டருக்கும் படிக்க வைச்சார்.

ஒரு நாளைக்கு '3 ஷிப்ட்' முறையில் அவர் சினிமாவில் நடித்துக்கொண்டு இருந்தபோது நான் மணிப்பாலில் டாக்டருக்கு படித்துக்கொண்டு இருந்தேன். அவருடன் நான் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை என்பதுதான் என் வாழ்க்கையில் உள்ள ஒரே குறையாகும். அவருடன் பணியாற்றிய சினிமா நண்பர்கள் அவரைப் பற்றி என்னிடம் கூறும் தகவல்கள் பிரமிப்பாக உள்ளது. 2000-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி குவைத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்க அப்பா சென்று இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தும் பயனின்றி இறந்துவிட்டார். மற்றவர்களுக்காக அவர் வாழ்ந்தார். அவருக்காக அவர் வாழவில்லை. இது ஒன்றுதான் குறை.

நான் கண் டாக்டராகி ஆயிரம் பேருக்கு 'ஆபரேஷன்' செய்ய வேண்டும் என்பதுதான் அவரது ஒரே ஆசை. அவரது விருப்பப்படியே கண் டாக்டராகி பல்லாயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை செய்து அவருடைய ஆசையை நிறைவேற்றி விட்டேன். அவரது ஆன்மா எங்களை என்றென்றும் ஆசீர்வதித்து கொண்டு இருக்கும்.

அந்த காலத்திலே அப்பா நடித்த படங்கள் எல்லாம் வெள்ளிக்கிழமையன்று வெளிவந்து வசூலை வாரிக் குவிக்கும். இதனால் 'வெள்ளிக்கிழமை' ஹீரோ அப்படீனு அழைக்கப்பட்டார். அப்பாவை வைத்து படம் எடுத்த ஒரு தயாரிப்பாளர் படத்தை வெளியிடுவதற்கு பணமின்றி சிரமப்பட்டார். அந்த தயாரிப்பாளரை வீட்டுக்கு வரச்சொல்லி தேவையான பணத்தை எடுத்துக்கொடுத்து நீங்க படத்தை ரிலீஸ் செய்யுங்க. அடுத்த படத்துக்கும் பூஜை செய்யுங்கள். நான் கால்ஷீட் கொடுக்கிறேன் அப்படீன்னு சொன்னார். (கட்டிங் கண்ணையா)

அப்பா அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாளின் போது அவர்களை கருணை இல்லத்திற்கு அழைத்து சென்று தன்னுடைய சொந்த செலவில் விருந்து ஏற்பாடு செய்வார். தான் இப்படி செய்தால் மற்றவர்களும் இதேபோல் செய்ய முன் வருவாங்க-ன்னு நம்பினார்.

துணிவே துணை படப்பிடிப்பின்போது என்னை ஹெலிகாப்டரில் அமர வைத்து சுற்றி பறக்கச் செய்தார். அப்பா தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை கொடுத்து கொண்டு இருந்தபோது, சிலர் நீங்கள் ஏன் சம்பளத்தை உயர்த்தி வாங்கக்கூடாது -ன்னு சில பேரு தூண்டி விட்ட போது. அப்பா ஒரு அலுவலகத்தில் வேலை செய்தால் எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களோ அதை விட தயாரிப்பாளர் அதிகமாகவே கொடுக்கிறார்கள்.. அது போதும் -முன்னு சொல்லிடுவார்.

ஒரு சமயம் தமிழ்நாட்டில் பலத்த புயல் மழையால் வெள்ளம் வந்தபோது அப்போது முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை ராமாபுரம் தோட்டத்தில் சந்தித்து ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினார். ரஜினிகாந்த் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர். முதன் முதலாக அப்பாவின் ரசிகராக வீட்டுக்கு வந்தார். அதன்பின் அடிக்கடி வீட்டுக்கு வருவார். எனக்கு 8 வயதில் இருந்தே ரஜினிகாந்தை தெரியும்.

அப்போது அதிகமான படங்களில் அப்பா 'ஹீரோ'வாக நடித்துக்கொண்டு இருந்தார். 'முரட்டுக்காளை' படத்தில் அப்பாவை வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க ஏவி.எம். சரவணன் விருப்பப்பட்டார். எங்களுக்கு அப்பாவை வில்லனாக பார்ப்பதில் உடன்பாடு இல்லை. ஆனால் ரஜினிக்கும், அப்பாவுக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது. சரவணன் சார் சொன்னதுக்காகவும், ரஜினி மீதான அன்புக்காகவும் அந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கிட்டார்.

அப்பா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 300 படங்களுக்கும் மேலாக நடித்து உள்ளார். வல்லவன் ஒருவன், இருவல்லவர்கள், சி.ஐ.டி. சங்கர், நீலகிரி எக்ஸ்பிரஸ், காலம் வெல்லும், துணிவே துணை போன்ற படங்கள் அவரது வீர தீரத்தை பறை சாற்றும். சேலம் ரோட்டரி கிளப் கூட்டத்தில் ரசிகர் மன்றம் அப்பாவுக்கு 'ஜேம்ஸ் பாண்ட்' பட்டத்தை வழங்கினார்கள்.

அனைத்து நடிகர், நடிகைகளுடனும் நட்புரிமையோடு பழகுவார். எம்.ஜி.ஆர்., சிவாஜியோடு அப்பாவுக்கு நெருக்கமான உறவு இருந்தது. சிவாஜி சார் 2 முறை வீட்டுக்கு வந்து இருக்கிறார். அப்பாவை 'சங்கரா' என்றுதான் கூப்பிடுவார். சினிமாவில் அனைத்து கெட்டப் பழக்கமின்றி ஒழுக்கத்தோடு வாழ்பவர் நடிகர் சிவகுமார் என்று பாராட்டுவார். கலைஞர் கருணாநிதியுடனும் அப்பாவுக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அவர் வசனம் எழுதிய வண்டிக்காரன் மகள் உள்ளிட்ட பல படங்களில் நடிச்சு இருக்கார்.

Updated On: 3 Jun 2021 6:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  4. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  5. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 43 அரசு பள்ளிகள்
  7. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  10. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?