சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்ற 'ஜெய்பீம்', 'ஆர்.ஆர்.ஆர்.' ..!
ஜெய்பீம் சூர்யா,RRR படத்தில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ராம ராவ்
அண்மையில், IFFI 2022 எனப்படும் இந்த ஆண்டுக்கான சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்குபெறும் படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் ஞானவேல் இயக்கத்தில் தமிழ் திரைப்படமான நடிகர் சூர்யா தயாரித்து நடித்த 'ஜெய்பீம்' திரைப்படமும் இயக்குநர் ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்.', 'காஷ்மீர் ஃபைல்ஸ்' உள்ளிட்ட படங்களும் இடம்பெற்றுள்ளன. இப்படங்கள் இந்தியப் பனோராமா பட்டியலுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் திரையிட தேர்வான மொத்தப் படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 25 பெரிய படங்களும், 20 குறும்படங்களும் இந்த விழாவில் இந்திய முழுவதும் உள்ள அனைத்து மொழிகளில் இருந்தும் தேர்வாகி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் ஏற்கெனவே ஏகப்பட்ட அங்கீகாரங்களை சர்வதேச அளவில் பெற்று வரும் நிலையில், சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடும் படங்களின் பட்டியலிலும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது என்பது பெருமிதத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது.
இதனைக் கொண்டாடும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள், சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிட ''ஜெய்பீம்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது மேலும், ஒரு மகுடம் சூடியது போல உள்ளது என மகிழ்ச்சிப் பெருக்கோடு சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
அண்மையில், 'சூரரைப் போற்று' படத்திற்கே 6 தேசிய விருதுகளை சூர்யாவின் படக்குழுவினர் அள்ளிய நிலையில், 'ஜெய்பீம்' படத்திற்கும் தேசிய விருதுகள் பல கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். ஆஸ்கர் வரை நல்ல அங்கீகாரம் இந்தப் படத்திற்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யாவைத் தவிர மணிகண்டன், லிஜிமோல் ஜோஷ் என ஒவ்வொரு நடிகர்களும் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பார்கள்.
இயக்குநர் ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்.', விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய 'காஷ்மீர் ஃபைல்ஸ்' உள்ளிட்ட படங்களும் இந்திய பனோரமா சார்பில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளப் போகிறது என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா கோவாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 53வது சர்வதே இந்திய திரைப்பட விழா வரும் நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 10 இந்திப் படங்களும், தமிழ் மற்றும் தெலுங்கில் தலா 4 படங்களும், 2 பெங்காலி படங்களும், 7 ஆங்கில படங்களும் கன்னடம் மற்றும் மலையாளத்தில் இருந்து மொத்தம் 3 படங்களும் 5 மராத்தி படங்களும் மற்ற இந்திய மொழிப் படங்களில் இருந்து தலா ஒரு படமும் திரையிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
'சூரரைப்போற்று' படம் ஆறு தேசிய விருதுகளைப் பெற்றிருக்கின்ற நிலையில், 'ஜெய்பீம்' படமும் மேலும் பல சிறப்புகளைப் பெற்றுத் தரப்போவது உறுதி என்பது சூர்யா ரசிகர்களின் உறுதி குலையாத நம்பிக்கையாக இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu