'இந்திய சுதந்திரதினம்75': பாடகர்கள் 75பேர் பங்கேற்கும் இசைத்திருவிழா.!
ஜெ.ஆர்.7 ப்ராடக்ட்ஸ் எல்எல்பி நிறுவனப் பொதுமேலாளர் கே.ஆர்.ஜெ.கதிர், சாதகப் பாறைகள் இசைக்குழு உரிமையாளர் சங்கர்ராம், பாடகர்கள், ஸ்ரீநிவாஸ், சுஜாதா மோகன் ஆகியோர் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசினர்
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத் தினத் திருவிழா ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு புதுமைப் பங்களிப்போடு கலைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், இந்த ஆண்டு இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை சென்னையில் 75 பாடகர்கள் பங்கேற்கும் இசைத் திருவிழாவாக ஆகஸ்ட் 14-ம் தேதி நிகழவிருக்கிறது.
இதுகுறித்து ஜெ.ஆர்.7 ப்ராடக்ட்ஸ் எல்எல்பி நிறுவனப் பொதுமேலாளர் கே.ஆர்.ஜெ.கதிர், சாதகப் பாறைகள் இசைக்குழு உரிமையாளர் சங்கர்ராம், பாடகர்கள், ஸ்ரீநிவாஸ், சுஜாதா மோகன் ஆகியோர் தியாகராய நகரில் செய்தியாளர்களிடம், ''நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, `ஜன கண மன-க்காக கைகோர்ப்போம்' என்ற தலைப்பில், 75 பிரபலப் பாடர்கள் பங்கேற்கும் இசைத் திருவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
தொடக்க அமர்வு காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், 2-வது அமர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெறும். தொடர்ந்து, இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை பாடல்கள் ஒலிக்கும். ஒவ்வொரு அமர்விலும் 25 பாடல்கள் வீதம் 75 பாடல்கள் பாடப்பட உள்ளன. இதில், முன்னணி பாடகர்கள், மூத்த பின்னணிப் பாடர்கள், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பாடகர்கள் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த இசை இயக்குநர்களின் பாடல்களைப் பாட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதி, யுனைடெட் பாடகர்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். இந்த அறக்கட்டளையில் 7 பாடகர்கள் அறங்காவலர்களாக இருக்கிறோம். கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை மூலம் நிறைய பாடகர்கள், இசைக் கலைஞர்களுக்கு உதவி செய்தோம். இந்த நிகழ்ச்சியில், தேசிய அளவிலான பாடல்கள் பாடப்பட்டாலும், பெரும்பாலானவை தமிழ்ப் பாடல்களாக இருக்கும்.
இவ்விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த இசை நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் தகவல்களைjr7events.comஎன்ற இணையத்தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu