தரையில் பாடிய என்னை திரையில் பாட வைத்தவர் இளையராஜா - நடிகர் வடிவேலு

இசைஞானி இளையராஜா பிரமாண்ட இசை நிகழ்ச்சிகளை உலகெங்கும் நடத்தி வருகிறார். அண்மையில், சென்னையிலும் கோவையிலும் இசை நிகழ்ச்சியை நடத்தினார். பிரமாண்ட மேடை பிரமிக்கத்தக்க ரசிகர்கள் கூட்டம் என அரங்கம் நிரம்பி வழிந்தது எங்கும்.
இந்தநிலையில் வருகின்ற 26/06/2022 அன்று மதுரையில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார் இசைஞானி இளையராஜா. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த இசை நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலுவும் கலந்துகொண்டு, இளையராஜாவின் இசையில் தான் பாடிய பாடல்களைப் பாடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜாவின் மதுரை இசை நிகழ்ச்சியில் தான் பாடவிருப்பது குறித்து வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வடிவேலு, "நான் பிறந்த மதுரை மீனாட்சி பட்டினத்திற்கு எங்கள் இசைஞானி கச்சேரி நடத்துவதற்கு வருகிறார். அதைக் கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. நானும் அந்தக் கச்சேரிக்கு கண்டிப்பாக வருகிறேன். தரையில் பாடிக் கொண்டிருந்த என்னை திரையில் பாட வைத்தவர் இளையராஜாதான். நான் திரையில் புகுந்து விளையாடுவதற்கு அவர்தான் காரணம். பாட்டுப் பாடுவதற்கும் எனக்கு பிள்ளையார் சுழி போட்டது இளையராஜாதான். மதுரை இசை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா முன்பு பாடி உங்கள் அனைவரையும் சந்தோசப்படுத்துவேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி" என்று உற்சாகம் பொங்கக் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu