இயக்குநர் மாதவனை வியந்து பார்க்கிறேன்... நெகிழ்ந்த நடிகர் சூர்யா..!

இயக்குநர் மாதவனை வியந்து பார்க்கிறேன்... நெகிழ்ந்த நடிகர் சூர்யா..!
X

நடிகர் சூர்யா, நடிகர் மாதவன்.

'ராக்கெட்ரி' படத்தை இயக்கிய நடிகர் மாதவனை இன்ஸ்டாகிராம் அழைப்பில் நடிகர் சூர்யா படம் குறித்து வியந்து பாராட்டினார்.

தமிழ்த் திரையுலகில் இயக்குநர் மணிரத்னத்தால் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் மாதவன். தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே ஈர்த்து வைத்திருப்பவர். இதனைத் தொடர்ந்து, தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ' ராக்கெட்ரி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

படம் உலகமெங்கும் ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பன்மொழிகளில் வெளியாகியுள்ளது. 'ராக்கெட்ரி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தநிலையில், நேற்று(02/07/2022) மாலை நடிகர் மாதவனும் நடிகர் சூர்யாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ராக்கெட்ரி' படம் குறித்து லைவ்வாக உரையாடினர்.

அப்போது, படத்தில் நடித்தது குறித்து மாதவனுடன் பகிர்ந்துகொண்ட சூர்யா, "நம்பி நாராயணன் அவர்களின் கதையைக் கேட்ட பின்பு அவருக்காகவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் எந்த ஒரு சம்பளமும் எனக்காக நான் வாங்கிக் கொள்ளவில்லை. இந்தப் படத்தில் நடித்தது எனக்கு பெருமையானது. அதேபோல இயக்குநராக உங்களைக் கண்டு வியந்தேன்" என்ற சூர்யா,

மேலும் மாதவனிடம், "நடிகராக நல்ல நண்பராக உங்களை எனக்குத் தெரியும். ஆனால், இயக்குநராக நீங்கள் அந்தக் கதையை யோசித்தவிதம், குறிப்பாக இறுதிக் காட்சியில் நம்பி நாராயணனாகவே நடித்த நீங்கள், ஒருகணம் விலகி நிஜமான நம்பி நாராயணனாகத் தோன்றிப் பேசிய பேச்சுகள் எனக்கு நிஜத்திலேயே கண்கலங்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. அதை நீங்கள் யோசித்தவிதம் என்னை 'இயக்குநர் மாதவனை'ப் பார்த்து வியப்படையச் செய்தது. ஒருபக்கம் நடித்துக்கொண்டு, இன்னொரு பக்கம் இயக்கம் பார்த்துக்கொண்டு எனப் பல வேலைகளை அந்தக் களத்தில் நீங்கள் செய்தது உண்மையிலேயே நான் வியந்து பார்த்தேன்" என்று தன்னுடைய பாராட்டுகளை மகிழ்ந்து தெரிவித்து படம் குறித்து வியந்து பேசியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!