கானா பாடல்களின் மூலம் அனைவரையும் ஆட்டம் போட வைத்த கானா பாலா பிறந்தநாள்
தமிழ் திரைப்படத்துறையில் கானா பாடல்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இவ்வாறு தனது கானா பாடல்களின் மூலம் நம் அனைவரையும் ஆட்டம் போட வைத்தவர் கானா பாலா. இவர் தனது 51 வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தாருடன் சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்.
நடிகர் மற்றும் பாடகரான கானா பாலாவிற்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இவர் பின்னணி பாடகராகவும், கானா பாடல்களை சொந்தமாக எழுதி பாடியும் வருகிறார். இதற்கு முன் கானா பாடல்கள் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது தேனிசை தென்றல் தேவா.
சென்னையில் பல மூலை முடுக்குகளிலும் கச்சேரிகளிலும் மட்டுமே பாடப்பட்டு வந்த கானா பாடல்களை முதன் முதலில் திரைப்படங்களில் பயன்படுத்தியவர் தேனிசை தென்றல் தேவா. அவ்வாறு பயன்படுத்தி வந்த இவரின் பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இவ்வாறு தமிழ் திரைப்படங்களில் உருவெடுத்த கானா பாடல்கள் இன்று வரை சிறப்பை பெற்று வருகிறது. பல்வேறு காலங்களில் பல்வேறு விதமான கானா பாடல்கள் பல்வேறு பாடகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் வேளையில் " பிறகு" என்ற படத்தின் மூலம் கானா பாடகராக திரைத்துறையில் அடியெடுத்து வைத்த கானா பாலா இன்று வரை வெற்றிகரமாக திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். வழக்கறிஞராக இருந்து வந்த கானா பாலா கானா பாடல்கள் மீதுகொண்ட காதலினால் அதை எழுதியும் பாடியும் வந்துள்ளார்.
இந்நிலையில் 2012ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் "ஆடி போனா ஆவணி" மற்றும் 'நடுக்கடலுல கப்பல" போன்ற பாடல்களின் மூலம் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பரவி மிகவும் பிரபலமானார்.
குறிப்பாக இவர் தற்போது முன்னணி இசையமைப்பாளர்கள் ஆக உள்ள ஜிவி பிரகாஷ் குமார், எஸ் தமன், சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன்சங்கர்ராஜா என பல பிரபல இசையமைப்பாளர்களின் படங்களில் எண்ணற்ற பாடல்களை பாடி வருகிறார். தனது தனித்த குரலாலும் சிறப்பான பாடல் வரிகளாளும் அனைவரையும் குத்தாட்டம் போட வைத்து மகிழ்வித்து வரும் கானா பாலா தனது 51 ஆவது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் அவரின் குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார். இவருக்கு நண்பர்கள் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu