'கைபேசி கைகாரி… குறுந்தகவல் கொலைகாரி…' : கவிஞர் அறிவுமதியின் காதல் பேசி..!

Lingusamy New Movie -திரைப்படப் பாடலாசிரியரும் பிரபல கவிஞருமான அறிவுமதி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கும் விழாக்களில் பேசுகிறபோது, எப்போதுமே தற்கால காதலைக் குறித்து ஒரு பாடலைப் பாடுவார். அப்படி அவர் பாடிவந்த ஒரு பாடலுக்கு அண்மையில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசைவடிவம் அளித்துள்ளார். அந்த இனிய காதல் பாடலை, தீபக் ப்ளூ, நின்சி வின்செண்ட் ஆகியோர் பாடியுள்ளனர். ஓர் இனிய மெல்லிசைப் பாடலாக அப்பாடல் உருவாகியிருக்கிறது.
'காதல் பேசி' என்கிற தலைப்பில் கவிஞர் அறிவுமதியின் அழகிய வரிகளில் இசையமைப்பாளர் தாஜ் நூர் இசையில் உருவாகியுள்ள இப்பாடலின் முன்னோட்டத்தை அண்மையில், இயக்குநர் லிங்குசாமி வெளியிட இயக்குநர் சசி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது இப்பாடல் குறித்து இயக்குநர் சசி, ''காரில் வீட்டுக்குப் போய்க்கொண்டிருப்போம், வீடு வந்திருக்கும். வீட்டில் நூறு வேலைகள் செய்வதற்காக காத்திருக்கும். அவற்றில் உடனடியாகச் செய்ய வேண்டிய அவசர வேலைகளும் இருக்கும். அப்படி இருந்தும் சில பாடல்களைக் கேட்கும்போது, காரை விட்டு இறங்காமல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்போம். சிலரது பாடல்கள் அப்படி இருக்கும். அப்படியான ஒருவர்தான் அறிவுமதி.
அவருடைய பாடல்களைக் கேட்கும்போது, பாடலில் அடுத்த வரியாக என்ன வரி போடுவார் என்கிற எதிர்பார்ப்பும் காத்திருப்பும் அவ்வளவு சுகமாக இருக்கும். இந்தப் பாடலிலும் அப்படிப்பட்ட வரிகள் இருக்கின்றன. அவை அனைத்தும் அவ்வளவு இளமையாக இருக்கின்றன. 2கே கிட்ஸ் என்று சொல்வார்களே, அவர்களுடைய மனத்தை சொல்கிற மாதிரி இருக்கிறது. 'கைபேசி கைகாரி… குறுந்தகவல் கொலைகாரி..' என்கிறார்.
அய்யய்யோ நான் மிரண்டு போய்விட்டேன். ரொம்ப நல்லா எழுதியிருக்கிறார். ரொம்ப இளமையா எழுதியிருக்கிறார். ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு மெலடி கேட்கிறேன். அவ்வளவு சாஃப்டா இருக்கு. திரும்பத் திரும்பக் கேட்கிறேன். நிச்சயமாக இந்தப் பாடல் எல்லோருடைய இதயத்தையும் ஆளப் போகுது'' என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லிங்குசாமி இப்பாடல் குறித்து பேசும்போது, ''என்னுடைய 'பையா' படம் வெளியான நேரத்தில் அறிவுமதி அண்ணன் இந்தப் பாடலைப் பாடிக் காட்டினார். அப்போதே அவரிடம், 'அண்ணே, இந்தப் பாட்டை யாரிடமும் கொடுக்காதீங்க. நம்ம படத்தில் பயன்படுத்தலாம்' என்று அவரிடம் சொன்னேன். அப்போதே எனக்கு இப்பாடல் ரொம்ப பிடிச்சிருந்தது. இன்றைய சூழலுக்கு இந்தப் பாட்டு அவ்வளவு பொருத்தமா இருக்கு. பாடலின் அந்த வரிகள் கெடாமல் அற்புதமாக இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.
இப்பாடலில் ஒரு வரி இருக்கும், காதலனுடைய கைபேசியை காதலியும் காதலியுடைய கைபேசியை காதலனும் மாத்திக்கிட்டா என்ன நடக்கும்னு ஒரு வரி இருக்கு. அந்த ஒரு வரியே ஒரு படம் மாதிரி எனக்குத் தெரிந்தது. அதுமாதிரி அழகான வரிகளும் அற்புதமான வரிகளும் நெறஞ்சிருக்கு. இது இந்தக் காலத்துக்கான பாட்டு. சமீபத்துல இந்த மாதிரியான ஒரு மெலடி பாடலை நான் கேட்கவில்லை. இது மிகப்பெரிய வெற்றி பெறும். அண்ணனுக்கு வாழ்த்துகள்'' என தெரிவித்தார்.
முழுப்பாடல் சில நாட்களில் வெளியாகும் என்றும் அது காணொலியாகவும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காதல் பேசி பாடலின் வரவை இளம் காதல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu