ஆசை, உல்லாசம், படங்கள் மூலம் அஜித்தின் கவனத்தைப் பெற்ற எஸ். ஜே. சூர்யா

ஆசை, உல்லாசம், படங்கள் மூலம் அஜித்தின் கவனத்தைப் பெற்ற எஸ். ஜே. சூர்யா
X

அஜித் மற்றும் எஸ். ஜே. சூர்யா

இயக்குநராக நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகு நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி நட்சத்திர அந்தஸ்தை நோக்கி அயராமல் பயணித்துக்கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா

திரைத்துறையில் எத்தனையோ இயக்குநர்கள் அரிதாரம் பூசியிருக்கிறார்கள். எத்தனையோ நடிகர்கள் ஒரு சில படங்களையாவது இயக்கியிருக்கிறார்கள். ஆனால் எஸ்.ஜே.சூர்யா சற்று வித்தியாசமானவர். ஒரு இயக்குநராக நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகு நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி நட்சத்திர அந்தஸ்தை நோக்கி அயராமல் பயணித்துக்கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா இன்று (ஜூலை 20) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார் .


திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிறந்தவரான சூர்யா சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். சினிமாவில் சாதிக்கும் வேட்கையுடன் சின்னச் சின்ன வேலைகள் செய்து சென்னையில் காலம் தள்ளினார். கே.பாக்யாராஜிடம் உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதையடுத்து 'கிழக்குச் சீமையிலே' படத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதற்கடுத்து வசந்திடம் 'ஆசை' படத்திலும், சபாபதியிடம் 'சுந்தரகாண்டம்' படத்திலும் ஜேடி-ஜெர்ரியிடம் 'உல்லாசம்' படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

'ஆசை', 'உல்லாசம்' படங்கள் மூலம் அஜித்தின் கவனத்தைப் பெற்றவர் அப்போது வளர்ந்து வந்த நட்சத்திரமான அஜித்துக்குக் கதை சொல்லும் வாய்ப்பைப் பெற்றார். அஜித் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்ததோடு முதல் முறையாக முற்று முழுதான எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படமான 'வாலி' உருவானது அப்படித்தான். 'வாலி' படம் அஜித்தின் திரைவாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்ததோடு அதுவரை ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்து வந்த அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படமாகவும் அமைந்தது.

பிறவியிலேயே காதுகேளாத, வாய்பேச முடியாத அண்ணன், எந்தக் குறைபாடும் இல்லாமல் அண்ணனின் அரவணைப்பில் மகிழ்ச்சியாக வாழும் தம்பி என இரண்டு வேடங்களில் அஜித் சிறப்பாக நடித்திருந்தார். 'வாலி' என்னும் தலைப்புக்கேற்ப தான் காதலித்த பெண்ணை தம்பி மணந்துகொண்ட பிறகும் அவள் மீது கொண்ட மோகத்தால் தன் தம்பியையே கொல்லத் துணியும் அழுத்தமான வில்லன் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக வடிவமைத்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

தன் கணவன் மீது உண்மையான காதலையும் அவனுடைய அண்ணன் தன் மீது நிகழ்த்தும் அத்துமீறல்களைக் கணவன் நம்ப மறுப்பதால் ஏற்படும் கையறு நிலையையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் சிம்ரன். அந்த வகையில் சிம்ரனுக்கும் இது மிக முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது. இது தவிர படத்தின் காதல் காட்சிகளும் மிகப் புதுமையாக அமைந்திருந்தன. நகைச்சுவைக் காட்சிகளும் ரசிக்கும்படியாக இருந்தன. மொத்தத்தில் தன் பிறவிக் குறைபாடுகளால் வஞ்சிக்கப்பட்டவனின் காதல் தோல்வியையும் பொருந்தாக் காமத்தையும் மையமாகக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர் கதையில் அனைத்து ஜனரஞ்சக அம்சங்களும் ரசிக்கக்கூடிய வகையில் இணைத்து முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் எஸ்.ஜே.சூர்யா


அடுத்ததாக அஜித்தின் போட்டி நடிகரான விஜய்யையும் சிம்ரனின் போட்டி நடிகையான ஜோதிகாவையும் வைத்து 'குஷி' படத்தை இயக்கினார் சூர்யா. காதலர்களுக்கு இடையிலான ஈகோ அவர்களைப் பிரித்து அந்த ஈகோவைக் கடைசியில் காதல் வெற்றிகொள்ளும் கதையை காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், கிளாமர், என அனைத்து அம்சங்களும் சரியான வகையில் கலந்த திரைக்கதையுடன் புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருந்தார். பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இந்தப் படம் விஜய், ஜோதிகா இருவருடைய திரைவாழ்விலும் முக்கியமான படமாக அமைந்தது. அவர்களுடைய நடிப்புத் திறமை சிறப்பாக வெளிப்பட்ட படங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

இந்தப் படத்தை தெலுங்கிலும் இந்தியிலும் எஸ்.ஜே.சூர்யாவே இயக்கினார். அந்த மறு ஆக்கங்களும் மிகப் பெரிய வெற்றிபெற்றன. 'குஷி' படமே ஒரு இயக்குநராக எஸ்.ஜே.சூர்யாவின் பெருமைக்குரிய அடையாளமானது.

'வாலி,' 'குஷி' இரண்டு படங்களுக்கும் தேவா இசையமைத்திருந்தார். இரண்டு படங்களிலும் அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. எஸ்.ஜே.சூர்யாவுக்கு இருந்த இசை ரசனையும் இதற்கு முக்கியக் காரணம். அடுத்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் கூட்டணி அமைத்தார். அஜித் நாயகனாக நடித்திருக்க வேண்டிய அந்தப் படத்தில் திடீரென்று தானே நாயகனாக நடிக்கப் போவதாக அறிவித்தார். சிம்ரன் இதில் நாயகியாக நடித்தார்.

'நியூ' என்று தலைப்பிடப்பட்ட படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்றதும் பலருக்கு இந்தப் படம் குறித்து சந்தேகம் எழுந்தது. ஆனால், அறிவியல் மிகை யதார்த்த வகைமையைச் சார்ந்த இந்தக் கதையை தன் சுவாரஸ்யமான திரைக்கதையால் ரசிக்க வைத்து மூன்றாவது முறையும் வெற்றிபெற்றார் எஸ்.ஜே.சூர்யா. அதோடு ஒரு நடிகராகவும் வெற்றி முகத்துடன் அறிமுகமானார். இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் மகேஷ்பாபு நாயகனாக நடித்திருந்தார்.

அடுத்ததாக இவர் இயக்கிய 'அன்பே ஆருயிரே' பிரிந்த காதலர்கள் ஒன்று சேரும் கதையை வித்தியாசமான வகையில் கையாண்டு வெற்றிபெற்ற படம். ரஹ்மான் இசையமைத்த இந்த இரண்டு படங்களிலும் மிகச் சிறப்பான பாடல்கள் அமைந்தன.

இதற்குப் பிறகு மற்றவர்கள் இயக்கும் திரைப்படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் எஸ்.ஜே.சூர்யா. 'கள்வனின் காதலி', 'திருமகன்', 'வியாபாரி', 'நியூட்டனின் மூன்றாம் விதி' ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றிபெறவில்லை. விமர்சகர்களின் பாராட்டையும் பெறவில்லை.


மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து மிகப் பெரிய வெற்றியும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற 'நண்பன்' படத்தில் சிறிய ஆனால் கவனிக்கத்தக்க வேடத்தில் நடித்தது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒரு நல்ல மறுதொடக்கத்தைக் கொடுத்தது. 2015-ல் அவர் மீண்டும் இயக்கி நடித்த 'இசை' படம் ஒரு இசையமைப்பாளரின் காதலையும் தொழிலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் மனநலச் சிக்கல்களையும் வைத்து பின்னப்பட்ட வித்தியாசமான திரைக்கதையுடன் விமர்சகர்களையும் ரசிகர்களையும் ஈர்த்து ஓரளவு வெற்றியையும் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் ஒரு இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.எஸ்.ஜே.சூர்யா.

2016-ல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' படம் ஒரு நடிகராக எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகப் பரவலான நற்பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்திருந்தாலும் இவருடைய கதாபாத்திரமே படத்தில் முக்கியப் பங்கு வகித்தது. இவருடைய நடிப்பே அதிகமாகப் பாராட்டப்பட்டது. குறிப்பாக கடைசிக் காட்சியில் ஆண் எனும் அகங்காரத்துக்கான ஒப்புதல் வாக்குமூலமாக கழிவிரக்கத்துடன் பேசும் அந்த நீண்ட சிங்கிள் ஷாட் காட்சி இவருடைய நடிப்புத் திறமையை அனைவரையும் வியக்க வைத்தது என்று சொல்லலாம். அந்தக் காட்சி ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் காணொலி வெளியாகி சமூக ஊடகங்களில் பரவலான வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து ஏ..ஆர்.முருகதாஸின் தமிழ்-தெலுங்கு இருமொழிப் படமான 'ஸ்பைடர்', விஜய் - அட்லி கூட்டணியில் அமைந்த 'மெர்சல்' ஆகிய படங்களில் வில்லனாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

'வாலி', 'நியூ' போன்ற படங்களால் அடல்ட்ஸ் ஒன்லி இயக்குநர்/நடிகர் என்ற முத்திரையிலிருந்து நீங்கி குழந்தைகளுக்கான படத்திலும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிரூபித்தார் சூர்யா.

ஐந்து படங்களை இயக்கியிருக்கும் எஸ்.ஜே.சூர்யா ஐந்திலும் வெவ்வேறு கதைக்களங்களைத் தொட்டார். பலர் தொடத் தயங்கும் காமம் சார்ந்த விஷயங்களைத் துணிச்சலாகக் கையாண்டார். ஆனால் காமத்தைக் கையாண்ட அவருடைய படங்கள்கூட அதை வைத்து கிளர்ச்சி ஊட்டும் படங்களாகச் சுருங்கி விடவில்லை. அனைத்துப் படங்களிலுமே அருமையான பாடல்கள், புதுமையான காதல் காட்சிகள், நகைச்சுவை, சென்டிமென்ட் என எல்லா ஜனரஞ்சக அம்சங்களையும் சரியாகக் கலந்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்தார். படமாக்கலிலும் தனக்கென்று ஒரு தனித்தன்மையை நிறுவினார்.

ஆனாலும் சூர்யா ஒரு நடிகராக சாதிக்க வேண்டும் என்ற இலக்கில் மிகத் தெளிவாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் மார்க்கெட் உடைய ஒரு நட்சத்திர நடிகராக வேண்டும் என்பதே தன் இலக்கு என்று 'இறைவி' படம் வெளியான பிறகு அளித்த ஒரு பேட்டியில் கூறினார். 'இதெல்லாம் சாத்தியமா' என்று அதைக் கேட்ட பலர் நினைத்திருக்கலாம். ஆனால் திறமையையும் தன்னம்பிக்கையையும் கடின உழைப்பையும் நம்புபவர்களுக்கு எதுவும் சாத்தியம்தான்.


எஸ்.ஜே.சூர்யா அவர் விரும்புவதைப் போல மும்மொழிகளிலும் ஒரு நட்சத்திர நடிகராக சாதிக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்

Tags

Next Story
Weight Loss Tips In Tamil