கணவர் மறைவுக்கு பிறகு எதிர்கொள்ளும் முதல் திருமண நாள்: நடிகை மீனா நெகிழ்வுப் பதிவு..!

கணவர் மறைவுக்கு பிறகு எதிர்கொள்ளும் முதல் திருமண நாள்: நடிகை மீனா நெகிழ்வுப் பதிவு..!
X
நடிகை மீனா, தனது கணவர் இறந்தபிறகு, சந்திக்கும் முதல் திருமண நாளில் நெகிழ்வான பதிவொன்றை சமூக வலைத்தளத்தில் பதிந்துள்ளார்.

நடிகை மீனா, தமிழ் திரைப்படங்களில் 1980 - 90களில் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். தான், திரையுலகில் பிஸியாக இருக்குபோதே, 2009-ல் பெங்களூருவைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பத்து வயதில் நைனிகா என்கிற மகள் இருக்கிறாள்.

நைனிகா விஜய்யின் 'தெறி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, 'அன்புள்ள ரஜினிகாந்த்'தில் மீனா பேரும் புகழும் அடைந்ததைப்போலவே, நைனிகாவும் 'தெறி' திரைப்படத்தின் மூலம் புகழடைந்தார்.

இந்நிலையில், கொரோனோ பெருந்தொற்றுக் காலமான மூன்றாவது அலையின்போது, கடந்த ஜனவரி மாதத்தில் நடிகை மீனாவின் குடும்பத்தினர் கொரோனாவினால் பாதிப்படைந்தனர். அதிலிருந்து அனைவரும் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து மீண்டனர். ஆனால், மீனாவின் கணவர் வித்யாசாகர் மட்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும், ஏற்கெனவே, நுரையீரல் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சையில் இருந்ததோடு, நுரையீரல் மாற்று சிகிச்சைக்காகக் காத்திருந்தார்.

அவருக்கு, புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததால், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரது இரு நுரையீரலும் செயல் இழந்ததால்தான், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்தநிலையில்தான், கடந்த ஜூன் மாத இறுதியில் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். தனது கணவரின் இழப்பைத் தாங்கிக்கொள்ள இயலாத மனவலியில் இருந்து இன்னமும் மீளமுடியாத நிலையில் இருந்த மீனா, நேற்று தனது 13வது திருமண நாளை எதிர்கொண்டார். தன் கணவர் மறைந்த பிறகு, தான் சந்திக்கும் முதல் திருமண நாள் என்பதால், இதனை மிகுந்த மனபாரத்துடனேயே கடந்தார்.

இந்நிலையில், அவர் தனது சமூக வலத்தளப் பக்கத்தில் கணவனுடனான புகைப்படத்தை பதிவிட்டு, மிகவும் உருக்கமான பதிவொன்றையும் போட்டிருந்தார். அதில், ‛‛நீங்கள் எங்களின் அழகான ஆசீர்வாதமாக இருந்தீர்கள். ஆனால், மிக விரைவில் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டீர்கள். என்றென்றும் எங்கள் (என்) இதயங்களில் வாழ்வீர்கள். அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பியதற்காக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நல்ல இதயங்களுக்கு நானும் எனது குடும்பத்தினரும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

எங்களுக்கு அவர்கள் கண்டிப்பாக தேவை. அன்பும் அக்கறையும் ஆதரவும் எங்கள் மீது பொழியும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அன்பை உணர்கிறோம்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் மீனா.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!