நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் திரையை அலங்கரிக்கப் போகும் படங்கள்..!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் திரையை அலங்கரிக்கப் போகும் படங்கள்..!
X
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளில் ஓடிடியில் வெளியான அவரது 'சூரரைப்போற்று', ''ஜெய்பீம்' படங்கள் திரையில் வெளியாகவுள்ளன.

ஒட்டுமொத்த உலகத்தையே புரட்டிப்போட்டது கொரோனா பெருந்தொற்றுக் காலமான கடந்த இரண்டு ஆண்டுகள். இக்காலகட்டத்தில் நோய்ப்பரவலைத் தடுக்கும் நோக்கோடு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. குறிப்பாக, முழு ஊரடங்கு. இதனால், விவசாயம் உள்ளிட்ட எல்லா தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

திரையரங்குகள் மூடப்பட்டன. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இதனால், திரைத்தொழில் தொடர்பான வேலை செய்யும் அனைவருமே செயலற்று நின்றனர். கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் கொஞ்சம் குறைந்தபோது கட்டுப்பாடுகளும் சிறிது தளர்த்தப்பட்டன. ஆனாலும், திரையரங்குகள் முழுமையாக செயல்படவில்லை.

இந்தநிலையில்தான், பல படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின. சிறிய பட்ஜெட் படங்களாக வெளியாகி வந்த சமயத்தில் நடிகர் சூர்யா, தனது, 'சூரரைப்போற்று' திரைப்படத்தை தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரின் எதிர்ப்புக்கு இடையே ஓடிடி தளத்தில் வெளியிட்டார். ஆனாலும், ரசிகர்கள் ஓடிடி தளத்திலும் படத்தை பார்த்துக்கொண்டாடி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்த 'ஜெய்பீம்' திரைப்படமும் இதேபோன்று ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, கூடவே அப்படம் பல்வேறு எதிர்ப்புகளையும் சந்தித்து அதிலிருந்து விடுபட்டு வெற்றிபெற்றது. பிரச்சனையின்போது, திரையுலகினரின் பலத்த ஆதரவும் நடிகர் சூர்யாவுக்கு கிடைத்தது.

அதேநேரம், குறிப்பிட்ட இந்த இரண்டு படங்களையும் தியேட்டர்களில் பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கமும் எதிபார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்தது.

இந்தநிலையில் வரும் ஜூலை 23-ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த இரண்டு படங்களும் ஒரு சில தியேட்டர்களில் திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படமும் ஞானவேல் இயக்கத்தில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படமும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நடிகர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23-ஐ அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்படப் பிரியர்களும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!