இசையமைப்பாளர் ராமமூர்த்தி பிறந்ததினம் இன்று
திருச்சியில், 1922ம் ஆண்டு பிறந்த டி.கே.ராமமூர்த்தியின் முழுப்பெயர் திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசுவாமி ராமமூர்த்தி. இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், சிறுவயதிலேயே அப்பாவுடன் சேர்ந்து கச்சேரி செய்தார். 1963ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன், இவர்களுக்கு "மெல்லிசை மன்னர்கள்' என்ற பட்டம் வழங்கினார். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
வயலின் கலைஞராக, இசைத்துறையில் நுழைந்த இவர், திரைப்பட இசையமைப்பாளர்கள் எஸ்.பி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்புராமன் குழுவில், வயலின் வாசித்தார். பிறகு எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து, திரைப்படங்களுக்கு இசையமைத்தார். இவர்கள் இசையமைத்த பாடல்கள், ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றதால், "மெல்லிசை மன்னர்கள்" என பாராட்டப்பட்டனர்.
கடந்த, 1964ம் ஆண்டு,"ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு பிறகு, இருவரும் பிரிந்தனர். ராமமூர்த்தி, "சாது மிரண்டால், தேன்மழை, ஆலயம்' உட்பட ,19 படங்களுக்கு தனியாக இசையமைத்தார். பிறகு, 1995ம் ஆண்டு, "எங்கிருந்தோ வந்தான்' படத்தின் மூலம், மீண்டும், எம்.எஸ்.விஸ்நாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
இவர்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில், 700 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளனர். ஆயிரக்கணக்கில் மேடை கச்சேரிகளையும் நடத்தியுள்ளனர். எம்.ஜி.ஆர்., நடித்த, "பணம் படைத்தவன்', படத்தில் , "கண்போன போக்கிலே கால் போகலாமா' பாடலுக்கு, இவரின் வயலின் இசையும், "புதிய பறவை' படத்தில்,"எங்கே நிம்மதி' பாடலில், இவரின் இசை பங்களிப்பும் மகத்தானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu