பிரபல பாலிவுட் நடிகை பாலியல் புகார்: தயாரிப்பாளருக்கு போலீஸ் வலைவீச்சு

பிரபல பாலிவுட் நடிகை பாலியல் புகார்: தயாரிப்பாளருக்கு போலீஸ் வலைவீச்சு
X

நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி.

பிரபல பாலிவுட் நடிகையான ஸ்வஸ்திகா முகர்ஜி ஷிப்பூர் படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்க்கார் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான ஸ்வஸ்திகா முகர்ஜி, 2001 ஆம் ஆண்டு ”ஹேமந்தர் பகி” என்ற வங்காள மொழி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தியில் வெளியான “காலா” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தி திரையுலகிலும் இவர் கால் பதித்தார். அதற்குப்பின் பல்வேறு இந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

தற்போது வங்காள மொழி மற்றும் இந்தியில் எடுக்கப்பட்டு வரும் “ஷிப்பூர்” என்ற திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மே மாதம் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே கொல்கத்தாவில் உள்ள கொல்ஃப் கிரீன் காவல் நிலையத்தில் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த புகாரில் “ஷிப்பூர்” திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்க்கார் மீது நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். சந்தீப் சர்க்கார் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்த அவர், அதிக சம்பளத்துடன் படவாய்ப்பு பெற்றுக்கொடுத்தது தான்தான் எனக்கூறி, தன்னுடன் நெருக்கமாக இருக்குமாறு வற்புறுத்துவதாக புகாரில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தி திரைப்பட நடிகைகள் அனைவரும் தனது ஆசைக்கு இணங்குவதைப்போல், நீயும் எனது ஆசைக்கு இணங்கித்தான் ஆக வேண்டும் என தொடர்ந்து சந்தீப் சர்க்கார் மிரட்டி வருவதாகவும் புகாரில் நடிகை ஸ்வஸ்திகா குறிப்பிட்டிருந்தார். தயாரிப்பாளர் சந்தீப் சர்க்கார் கூறியதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால், தனது மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை ஆபாச இணையதளங்களில் பதிவிடப்போவதாகவும் அவர் மிரட்டுவதாக தெரிவித்து நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி புகாரை அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தீப் சர்க்கார் மீது பெண் வன்கொடுமை, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைத்தபோது தயாரிப்பாளர் சந்தீப் சர்க்கார் தலைமறைவானது தெரியவந்தது.

அதனடிப்படையில் அவரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்து புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருவது பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!