குடும்பத்தினர் விஷம் வைத்து கொள்ள முயற்சி: நடிகர் பொன்னம்பலம் பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகர் பொன்னம்பலம்.
சண்டை பயிற்சியாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் பொன்னம்பலம் அதன் பின்னர் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவராக அறிமுகமானார். நாட்டாமை, முத்து, அமர்க்களம், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட திரைப்படங்களில் அவரது நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது.
தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொன்னம்பலம் போட்டியாளராக பங்கு பெற்றார். அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பொன்னம்பலம் தனக்கு உடல் நிலை சரியில்லை எனவும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்ய வேண்டும் வீடியோ வெளியிட்டார்.
இதன் பின்னர் நடிகர் விஜய்சேதுபதி, நடிகர் கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர். இதனால் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று நலமுடன் உள்ளார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள நடிகர் பொன்னம்பலம் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில் “ தனக்கு மதுபானத்தில் ( Slow Poision) விஷம் வைக்கப்பட்டதாகவும், அதன் மூலம் தனது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர் “ ஒரு நாள் சாப்பாடு சாப்பிட்டபின் உடல் நிலை மோசமானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உடலில் செலுத்தப்பட்ட அதே வகையான விஷம் உணவில் கலந்திருப்பதை கண்டறிந்தனர்.
எனது அறையின் வாசலில் நின்று சிகரெட் புகைத்து கொண்டிருந்தேன் தூரத்தில் எனது உதவியாளரும், எனது அலுவலகத்தில் மேனேஜராக உள்ள சொந்த அண்ணனும் கையில் பொம்மை மற்றும் எனது உடைகள் உள்ளிட்ட பொருட்களை புதைத்து கொண்டிருந்தனர். அப்போது எனது உதவியாளரை மட்டும் ஒரு அறையில் அடைத்து வைத்து அவரை மிரட்டி நடந்த விவரங்களை கேட்டேன்.
அதன் பின்னர் தான் என் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி மற்றும் சூனியம் வைக்க முயற்சி உள்ளிட்டவை தெரிய வந்தது. எனது சிறுநீரகம் நான் மது அருந்தியதால் பாதிக்கப்பட்டது என ஊடகங்களில் பேசத் தொடங்கினர். எனது அண்ணன் மதுவிலும், உணவிலும் விஷம் வைத்ததால் தான் சிறுநீரகம் பாதிக்கப்பட்டது.
எனது தந்தைக்கு நான்கு மனைவிகள். அதில் மூன்றாவது மனைவியின் மகன் எனது அலுவலகத்தில் மேனஜராக உள்ளார். நான் சினிமாவில் சம்பாதித்த அனைத்தையும் எனது குடும்பத்திற்குத்தான் செலவு செய்துள்ளேன். எனது வளர்ச்சி பிடிக்காமல் என்னை எனது அண்ணன் கொல்ல முயற்சிக்கிறார்” என பொன்னம்பலம் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu