அட இதெல்லாம் எதிர்நீச்சல் குணசேகரன் எடுத்த படங்களா? இப்படிபட்ட ஆளா இவரு?
சீரியல் என்றாலே முகத்தைச் சுளிக்கும் இளைஞர்கள் மத்தியில் எதிர்நீச்சல் சீரியல் நல்ல பெயரைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் கதையின் திருப்பம் இளைஞர்களைக் கவர்ந்து வருகிறது என்றே சொல்லலாம். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பூமர்களுக்கும் காதலித்து வேற்றுமைகளை உடைக்கும் இளைஞர்களுக்கும் இடையேயான போராகவே இதனைப் பார்க்கிறார்கள். அப்படி பூமர் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் இயக்குநர் மாரிமுத்து.
இவர் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் உதவி இயக்குநராகவும், இயக்குநராகவும் பணியாற்றியவர். உதவி இயக்குநராக மணிரத்னத்துடனும் துணை இயக்குநராக எஸ்ஜே சூர்யாவுடனும் இருந்திருக்கிறார். மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நேருக்கு நேர் படத்தில் இவர் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். இருவர் படத்திலும் இவருக்கு உதவி இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சன்டிவியின் எதிர்நீச்சல் தொடரில் இவரின் நடிப்பு பிரமாதம் என்று பாராட்டுகின்றனர். இவரும் சினிமா வாய்ப்பு குறைந்துதான் நடிக்க வந்தார். ஆனால் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். இப்போது இந்தியன் 2 படத்திலும் 7 வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கிறார். முன்னதாக விக்ரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார்.
இவர் இயக்கத்தில் 2 சூப்பரான திரைப்படங்கள் வந்திருக்கின்றன. வசூல் ரீதியாக பெரிய அளவில் செல்லாவிட்டாலும் ரசிகர்கள், விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
2008ம் ஆண்டு இவரின் இயக்கத்தில் வெளியான படம் கண்ணும் கண்ணும். பிரசன்னா, உதயதாரா, வடிவேலு, சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்த படம் பிரசன்னாவுக்கு நல்ல ஒரு ஃபீல்குட் படமாக அமைந்தது.
மீண்டும் 2014ம் ஆண்டு புலிவால் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா ஆகியோர் நடித்திருந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரசன்னாவுக்கு நல்ல ஹிட் படமாகவும் அமைந்தது.
இயக்குநராக இருந்தாலும் கிட்டத்தட்ட 60 படங்களில் இவர் நடித்திருக்கிறார். இருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு கிடைத்த அங்கீகாரம் மற்ற படங்களில் கிடைக்கவில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu