சினிமா டைரக்டர் எஸ் பி. முத்துராமன் 86வது பிறந்தநாள் இன்று

சினிமா டைரக்டர் எஸ் பி. முத்துராமன் 86வது பிறந்தநாள் இன்று
X
தயாரிப்பாளர்கள்,நடிகர்கள்,ரசிகர்களின் இயக்குநர்.என்பதுடன் அமைதியே கேரக்டரெனக் கொண்டு வாழும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

கோலிவுட்டின் பல்கலைக்கழகம் என்றழைக்கப்படும் ஏவிஎம் நிறுவனத்தால் கொஞ்சம் கொஞ்சமாக புடம் போட்டு உருவாக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முக்கியமான முகம் இயக்குநர் SP.முத்துராமன். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 75க்கும் கூடுதலானத் திரைப்படங்களை இயக்கி உள்ளார். தமிழ்த் திரையுலகில் வெற்றி நாட்டிய ஒருசில வணிகநோக்கு இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

ஆரம்பத்தில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் கமல்ஹாசன் படங்களை இயக்கி வந்தார். 1970களின் பிற்பகுதிகளில் இவருக்கும் ரஜினிகாந்த்திற்கும் ஏற்பட்ட தொழில்முறை உறவு பலப்பட்டு 25 திரைப்படங்களை இருவரும் இணைந்து உருவாக்கினாங்க. ரஜினியின் திரைவாழ்வை வடிவமைத்ததிலும் அவரை வணிக அளவில் பெரும் வெற்றி நாயகராக மாற்றிய திலும் இவருக்குப் பெரும் பங்கிருந்தது.


இவர் இரு தென்மண்டல பிலிம்பேர் விருதுகளையும் தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுள்ளார். இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. அப்பா இராம.சுப்பையா, தாயார் விசாலாட்சி. எஸ்.பி.முத்து ராமனுக்கு செல்வமணி, சுவாமி நாதன், சுபவீரபாண்டியன் ஆகிய 3 தம்பிகளும், கனகம் என்கிற ஒரே தங்கையும் உண்டு. தேவகோட்டை டிபிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் 9-வது வகுப்பு படிக்கும்போது தனது பள்ளியில் நாடகங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் எஸ்.பி.முத்துராமன் நடத்தினார்.

அவரது கலை ஆர்வத்திற்கு பாதிரியார் மச்சோடோ ஊக்கமளித்தார்.காரைக்குடி சண்முகவிலாஸ் தியேட்டரில் டி.கே.எஸ்.நாடகக் குழுவினரின் நாடகத்தைப் பார்க்க தனது தந்தையுடன் எஸ்.பி.முத்துராமன் சென்றார். நாடகத்தைப் பார்க்க, பார்க்க கலைத்துறை மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு போச்சு. 1952-ம் ஆண்டு கருணாநிதியின் சிறப்பான வசனத்தில், சிவாஜி கணேசன் அற்புதமாக நடித்த பராசக்தியை பார்த்த எஸ்.பி.முத்து ராமன், "இனி நம் வாழ்க்கை திரையுலகம்தான்" அப்படீன்னு முடிவு செஞ்சு அதை பெற்றோரிடமும் தெரிவித்தார். அவங்களும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. எஸ்.எஸ்.எல்.சி முடிச்ச கையோடு மெட்ராஸ் புறப்பட்டார், முத்துராமன்.

பொழப்பு வேணுமே.. அதுக்காக கண்ணதாசனின் தென்றல் பத்திரிகையில் பணிபுரிய, முத்துராமனை அவரது தந்தையே சேர்த்து விட்டார். பத்திரிகையில் பணிபுரிந்தாலும் சினிமாவில் சேரவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போனது. இதை புரிந்து கொண்ட முத்துராமனின் தந்தை, தனது மகனை ஏவி.எம். புரொடக்ஷனில் சேர்த்துவிட்டார். ஏவி.மெய்யப்ப செட்டியார், முத்துராமனை அழைத்து எடிட்டிங் துறையில் பணியாற்ற அனுப்பி வைத்தார்.

1956-ம் ஆண்டு ஏவி.எம்.மில் சேர்ந்த முத்துராமனுக்கு எடிட்டர் சூரியா, இயக்குனர் கே.சங்கர் ஆகியோர் தொழில் கற்றுக் கொடுத்தாங்க. மெய்யப்ப செட்டியாரின் மகன்கள் முருகன், குமரன், சரவணன், மருமகன் ஏ.வீரப்பன் ஆகியோர் இணைந்து தயாரித்த களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குனராக எஸ்.பி. முத்துராமன் பணிபுரிந்தார். இந்த படத்தை டி.பிரகாஷ்ராவ், ஏ.பீம்சிங் ஆகியோர் இயக்கினார்கள். கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுக மானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு, யோகானந்த், கிருஷ்ணன் நாயர், புட்டண்ணா கனகல் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன்பின்னர் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தரிடம் உதவி இயக்குனராக முத்துராமனை ஏவி.எம்.சரவணன் சேர்த்துவிட்டார்.

இதுபற்றி எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டபோது, "ஏ.சி.திருலோகசந்தர் ஏவி.எம்.ஸ்டூடியோவுக்காக இயக்கிய பல படங்களில் நான் உதவி இயக்குனராக இருந்தேன். அவரை என் குருவாக நினைத்து அவரிடமிருந்து தொழில் கற்றுக்கொண்டேன்" என்றார். வி.சி.குகநாதன் தயாரிப்பில் ஜெய்சங்கர், முத்துராமன் நடித்த கனிமுத்துபாப்பா என்ற படத்தை இயக்க எஸ்.பி.முத்துராமனுக்கு வாய்ப்பு கிடைத்தது. படம் வெளிவந்து 75 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 1973 முதல் 1975-ம் ஆண்டு வரை வி.சி.குகநாதன் தயாரிப்பில் பெத்த மனம் பித்து, காசி யாத்திரை, அன்புத்தங்கை, தெய்வக்குழந்தை ஆகிய படங்களை முத்துராமன் இயக்கினார்.

தொடர்ந்து எங்கம்மா சபதம் என்ற படத்தையும், முத்துராமன் – சுஜாதா நடித்த மயங்குகிறாள் ஒரு மாது என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டது. கல்லூரி வாழ்க்கையில் தவறி விழுந்த கதாநாயகியை (சுஜாதா), கதாநாயகன் (முத்துராமன்) ஏற்றுக்கொள்வார். சுஜாதாவை, தேங்காய் சீனிவாசன் பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பார். கடைசியில், "எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டுதான் நான் திருமணம் செய்தேன்" என்று முத்துராமன் அறிவிப்பார். எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்த இப்படம் 100 நாட்கள் ஓடியது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் புராணகால திரைப்படச் சூழலிலிருந்து தமிழ் சினிமாவை மீட்டெடுத்து, கதைக்கான முக்கியத்துவத்துடன் சினிமாவை வேறு ஒரு பாதைக்கு மடை திருப்பியவர்கள் ஸ்ரீதரும் கே.பாலசந்தரும். அதே சமயம் யதார்த்தங்களும் கதையம்சமும் வாய்ந்த காவியங்களாக பயணித்துக் கொண்டிருந்த அந்த மடைமாற்றப்பட்ட தமிழ் சினிமாவை, வர்த்தகரீதியில் மிகப்பெரிய தளத்துக்குக் கொண்டுசென்ற பெருமை SP.முத்துராமனைச் சாரும்.

அது மட்டுமில்லாமல் படம் தோல்வியடைந்தாலும் அந்தப் படம் ஒரு குறிப்பிட்ட ஒரு லாபத்தை ஈட்டவேண்டுமென்று நிர்ணயிக்கப் படும். அந்த நிர்ணயிக்கப்பட்ட லாபத்தை திரைப்பட வியாபாரத்தில் minimum guarantee (குறைந்தபட்ச உத்திரவாதம்) என்று அழைப்பார்கள். ஒரு நடிகராக தன்னை நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு, அவர்கள் போட்ட முதலில் குறைந்த பட்ச லாபத்தை சாத்தியப்படுத்தியது எம்ஜிஆர்.தான். அதனால்தான் எம்ஜிஆருக்கு Minimum Guarantee Return (MGR) நடிகர் என்ற பெருமை உண்டு. அதுபோல, Minimum Guarantee Return டைரக்டர் என்று ஒருவர் இருந்தாரென்றால் அது நிச்சயம் SP.முத்துராமன்தான்.

இதை எல்லாம் மனசில் கொண்டுதான் 2011ஆம் ஆண்டு ரஜினி, தனது 'ராணா' படத்தை தொடங்கியபோது அதன் பூஜையில் தன்னை வளர்த்தவர்களுக்கு மரியாதை செய்த ரஜினி கே.பாலசந்தர், பஞ்சு அருணாசலம், RM.வீரப்பன் வரிசையில் SP.முத்துராம னையும் வைத்து அழகு பார்த்தார். ரஜினியின் சினிமா வாழ்க்கையின் முக்கியமான பக்கங்கள் SP.முத்துராமனால் எழுதப்பட்டவை. தான் இயக்கிய எழுபது படங்களில் இருபத்தைந்து படங்கள் ரஜினியை வைத்து இயக்கியிருக்கிறார் SP.முத்துராமன். இதனால்தான், 'ரஜினி எனும் வைரத்தை கண்டெடுத்தது நானென்றால் அதை பட்டைதீட்டியது SP.முத்துராமன்தான்' என்று, கே.பாலசந்தர் ஒருமுறை SP.முத்துராமனை பாராட்டினார்.


'சூப்பர் ஸ்டார்' என்ற ஒற்றை மந்திரச்சொல்லுக்கு என்ன என்ன குணாதிசயங்கள் இருக்க வேண்டுமோ, அதையெல்லாம் ரஜினியை வைத்து வரையறை செய்தவர் இவர். ரஜினிக்கு 'பைரவி' படத்திலேயே 'சூப்பர் ஸ்டார்' பட்டம் கிடைத்திருந்தாலும் 'சூப்பர் ஸ்டார் என்றால் என்ன ?' என்று காட்டியது SP.முத்துராமனின் 'ப்ரியா', 'முரட்டுக்காளை' போன்ற படங்கள்தான். ஆரம்ப காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த ரஜினியை ஒரு கதாநாயகனாக, நல்லவனாக சித்தரித்த திரைப்படம் 'புவனா ஒரு கேள்விக்குறி'. அதுவரை ஹீரோவாக இருந்த சிவக்குமாரை வில்லனாக்கி, வில்லனாக இருந்த ரஜினியை ஹீரோவாக்கி ஒரு புதுமுயற்சியில் மிகப்பெரிய வெற்றியடைந்தார் SP.முத்துராமன்.

இதை எல்லாம் விட முக்கியமாக எண்பதுகளில் தமிழ் சினிமாவின் இரு கைகளில், ஒரு கை ரஜினியிடம் இருந்ததுபோல மற்றொரு கை கமலிடம் இருந்தது. இந்த இரு பெருங்கைகளையும் தனது கைகளுக்குள் வைத்திருந்தார் SP.முத்துராமன். ரஜினியை வைத்து இருபத்தைந்து படங்கள் இயக்கியது போல, கமலை வைத்து பத்துப் படங்கள் இயக்கியிருக்கிறார். 'மோகம் முப்பது வருஷம்' என்ற படம் இருவரும் இணைந்த முதல் படமாக இருந்தாலும், கமலுக்கும் SP.முத்துராமனுக்குமான தொடர்பு 'களத்தூர் கண்ணம்மாவி'லேயே தொடங்கிய ஒன்று. கமல் அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா'வில் SP.முத்துராமன் உதவி இயக்குநர். 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்று ஒரு சிறுவனாக பாடிய கமலை, 'இளமை இதோ இதோ' என்று பாட வைத்து 'சகலகலா வல்லவன்' ஆக்கினார்.

ரஜினிக்கு 'முரட்டுக்காளை' எப்படி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோ அதுபோல கமலின் கமர்ஷியல் முத்திரைக்கு மிகப்பெரிய வெற்றி இந்த 'சகலகலா வல்லவன்'. அதைத் தொடர்ந்து 'தூங்காதே தம்பி தூங்காதே', 'எனக்குள் ஒருவன்', 'பேர் சொல்லும் பிள்ளை', என்று அவர் கமலை வைத்து இயக்கிய படங்களின் பட்டியல் முழுவதும் வெற்றிதான் நிரம்பியிருக்கிறது.


இப்படி தயாரிப்பாளர்களின் இயக்குநர். நடிகர்களின் இயக்குநர். ரசிகர்களின் இயக்குநர்.என்பதுடன் அமைதியே கேரக்டரெனக் கொண்டு வாழும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு இன்று பிறந்த நாள்.

அவரை மனதார வாழ்த்துவோம்! வணங்குவோம்!!

Tags

Next Story
Weight Loss Tips In Tamil