காட்டமான கேள்விகளுடன் இயக்குநர் பொன்வண்ணன்! அதிரும் சமூக வலைதளங்கள்..!

ஞானவேல் ராஜாவின் வீடியோ வைரலான நிலையில், தன் ஆதரவு நிலைப்பாட்டை கடுமையாக விளக்கியுள்ளார் இயக்குநர் பொன்வண்ணன். அவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் பேட்டி, உடல்மொழியில், பேச்சும் வக்கிரமாக இருந்தது என தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.
அமீர் Vs ஞானவேல் ராஜா பிரச்னைதான் இப்போதைய டிரெண்ட். ஞானவேல் ராஜா பேட்டியைப் பார்த்த பலரும் இவர் அமீரை விமர்சிப்பது முறையல்ல என்று கடுமையாக சாடி வருகின்றனர். அமீருடன் பழகியவர்களும், பிரபலங்களும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து இது முறையல்ல என்பதை ஞானவேல் ராஜாவுக்கு தெரிவித்து வருகின்றனர். இதில் இடையில் மாட்டிக் கொண்டது என்னவோ சூர்யா குடும்பத்தினர்தான்.
நடிகர் சூர்யாவின் அப்பா சிவகுமாரோ, பருத்திவீரன் நாயகனான கார்த்தியோ இதுகுறித்து வாய்த்திறக்காமல் இருப்பது ரசிகர்கள் மேலும் அப்செட் ஆக்கியுள்ளது. இது அவர்களின் இமேஜிக்குதான் கெட்ட பெயரை உருவாக்கும் என்பது தெரிந்திருந்தும் அவர்கள் இதில் கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுதா கொங்கராவை போகிற போக்கில் மாட்டிவிட்டுள்ளார் ஞானவேல் ராஜா. அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அமீரின் திறமையை கேலி செய்யும் வகையில் பேசினார். அதற்கு துணையாக சுதாகொங்கராவையும் அழைத்துக் கொண்டுள்ளார்.
அதே நேர்காணலில் பேசிய ஞானவேல் ராஜா, “மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த கார்த்தி, சுதா கொங்கரா, நான் 3 பேரும் அமீர் இயக்கிய 'ராம்' படத்தை பார்க்க சென்றோம். படத்தை பார்த்த சுதா படத்தின் மேக்கிங் சரியில்லை என்றார்” என்று கூறியிருந்தார்.
இதற்கு நேரடியாக பதிலளிக்கவில்லை என்றாலும் சுதா கொங்கரா, அவர் டிவிட்டர் கணக்கில் அமீர் குறித்து பெருமையாக புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இவரை நோக்கி இன்னும் பல கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.
இதே வேளையில் அந்த படத்தில் நடித்த மற்றொரு இயக்குநரான பொன்வண்ணன், அமீருக்கு ஆதரவு தெரிவித்தும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் பக்குவமில்லாத பேட்டியை எதிர்த்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘பருத்தி வீரன்’திரைப்படம் பற்றிய
தயாரிப்பாளர் ஞான வேல் அவர்களின் சமீபத்திய ஊடக பேட்டியைப்பார்த்தேன்!
அத்திரைப்படத்தில் நடிகனாக மட்டுமல்லாமல் , நான் பல்வேறு நிலைகளில் பங்காற்றியவன் என்ற வகையில் சில விளக்கங்கள் தர கடமைப்பட்டுள்ளேன்.
அத்திரைப்படம் ஆரம்பித்து முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பு தள்ளிப் போய் கொண்டிருந்தது. அதற்கான முழுமையான காரணம் எங்களுக்கு அப்போது தெரியவில்லை.
அதன்பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கிய போது,
அமீர் அவர்கள் பொறுப்பேற்று, பல நண்பர்கள், உறவினர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நானறிவேன்!
பல் வேறு கட்டங்களாக படப்பிடிப்பு . தொடர்ந்தது.
ஒவ்வொரு காட்சியமைப்பும் அவருக்கு திருப்தி வரும் வரை பல நாட்கள் எடுத்து கொண்டே இருந்தார்.
நானும்,உடனிருந்த சமுத்திரகனியும், செலவுகளைச் சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை சமாதான்படுத்திவிட்டு, டப்பிங்.. எடிட்டிங் ... ரீரெக்கார்டிங் என எல்லா நிலைகளிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே மன நிலையுடன்தான் வேலை பார்த்தார்.
பல வருடங்கள் திரைத்துறையில் பயணித்து வந்த எனக்கு அந்த உழைப்பும், அர்பணிப்பும் மதிக்கத்தக்கதாக இருந்தது.
இதனால்தான்,பணத்துக்காக தனது ‘’படைப்பிற்கு’’ என்றும் துரோகம் செய்பவரல்ல அமீர் என்பதை நான் அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்லமுடியும்.
படம் வெளியாகி உலக அளவிலும், இந்திய சினிமாவிலும், படைப்பு ரீதியாகவும், தொழில்நுட்பமாகவும்,விமர்சனங்களாலும்,வசூல் ரீதியாகவும், அதில் பங்குபெற்ற கலைஞர்களுக்கும் கிடைத்த ‘தேசிய விருது’’ அங்கீகாரங்காளாலும் அது பெற்ற இடமோ உயரியது.
படம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே, பொருளாதாரம் சார்ந்து இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வெளியீட்டுக்கு பின்பும் ,திரைத்துறை சார்ந்த பல்வேறு சங்கங்கள் தலையிட்டும் , பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிற இந்த நிலையில் ,
தயாரிப்பாளர் ஞானவேல் தனது பக்க நியாயத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது. ஆனால் அதில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் .
உலகமே அங்கீகரித்த படைப்பையும்,அதன் படைப்பாளியையும் உங்களின் தனிப்பட்டகாரணங்களுக்காக ..
திருடன்,வேலைதெரியாதவர்..என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல..! அந்த ஊடக பேட்டிமுழுக்க உங்களின் உடல்மொழியும், பேச்சுத்திமிரும்,வக்கிரமாக இருந்தது..!
தங்கள் தயாரிப்பில் வந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்திவீரனையும்,அதனது படைப்பாளியையும் எடைபோட்டுவிட்டீர்களோ!
வேண்டாம் இந்த தரம் தாழ்ந்த மனநிலை..!
இனியும் உங்களுக்கிடையேயான பிரச்சனைகளை அதற்கான பாதையில் நேர்மையாக அணுகி தீர்வு காணுங்கள்.!
பருத்திவீரன் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அனைவருக்குமிடையே இருந்த நட்பும்,உறவும் மீண்டும் மலரவேண்டும் என்ற
ஆசைகளுடன்..
ப்ரியங்களுடன்
பொண்வண்ணன்
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu