மக்கள் மனங்களில் குடும்ப உறுப்பினரைப் போல் நிலைத்துவிட்ட நடிகர் டெல்லி கணேஷ்

நடிகர் டெல்லி கணேஷ் குடும்பம்
மக்கள் மனங்களிலும் அவர்கள் குடும்ப உறுப்பினரைப் போல் நிலைத்துவிட்ட நடிகர் டெல்லி கணேஷ் பிறந்த தினம்.இவர் டெல்லிக்காரராக இருப்பாரோ என்று பலருக்கு சந்தேகமும் இல்லாமல் இல்லை.
'பேர கேட்டவுடனே சும்மா அதிருதில் ல'ன்னு 'சிவாஜி' படத்தில் ரஜினி வசனம் பேசுவார். அப்படி சொல்கிற அளவுக்கு நடிகர் டெல்லி கணேஷ் என்ற பெயரை கேட்டவுடன் நகைச்சுவையில் அதிரடி பட்டாசுகள் வெடிக்கும். இவர் டெல்லிக்காரராக இருப்பாரோ என்று பலருக்கு சந்தேகமும் இல்லாமல் இல்லை..
ஆனால் அவர் சாட்சாத் தமிழ்க்காரர். அதுவும் திருநெல்வேலிக்காரர்.அவருக்கு இன்று 77 வது பிறந்த நாள்.
டெல்லி கணேஷ் திருநெல்வேலி அருகேயுள்ள வல்லநாடு எனும் பகுதியில் 1944 ம் ஆண்டு ஆகஸ்ட் 01 ம் தேதி ( தற்போது துாத்துக்குடி மாவட்டம்) பிறந்த மூத்த தமிழ் நடிகர். இவர் பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் காணப்படும் திரைப்பட நடிகர். கமலஹாசன் உடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
அவரது பாத்திரம் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது. அவர் 1976 ம் ஆண்டுகளில் இருந்து தற்போது வரை 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'டில்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 ம் ஆண்டு முதல் 1974 ம் ஆண்டு வரை இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றினார்.
டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977 ), தமிழ் திரையுலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே. பாலசந்தர் . டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது.
ஆனால் அவர், அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படங்கள் சிந்து பைரவி ,நாயகன், மைக்கேல் மதன காமராஜன் ,ஆஹா மற்றும் தெனாலி .
டெல்லி கணேஷ் ஒரு முக்கியமான தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சித்தொடர் நடிகர். இவர் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார்.
1. முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரனிடம் (எம்.ஜி. ஆர்) இருந்து பசி (1979) திரைப்படத்துக்காக "தமிழ்நாடு மாநில அரசு சிறந்த நடிகருக்கான" விருதினைப் பெற்றார்.
2. டெல்லி கணேஷ் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவிடம் இருந்து தமிழ்நாடு மாநில அரசின் 1993 - 1994 ஆம் ஆண்டிற்கான " கலைமாமணி " விருது பெற்றார்.
அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் நம்ம இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக...
தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள், கதாநாயகிகள், நகைச்சுவைக் கலைஞர்கள், வில்லன் நடிகர்கள் என்பவர்களுக்குக் கிடைக்கும் புகழும் நட்சத்திர அந்தஸ்தும் துணை நடிகர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது நிதர்சனம். ஆனால், ஒரு திரைப்படம் முழுமையடைவதற்கும் மக்களால் ரசிக்கப்படுவதற்கும் அவர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவர்களில் சிலர் மிக நீண்ட காலம் நடிப்புத் துறையில் கோலோச்சி வெற்றிபெறுவதோடு மக்கள் மனதோடு மிகவும் நெருக்கமாகிவிடுகிறார்கள்.
இப்படி பல பத்தாண்டுகளாகத் துணை நடிகராக நடித்துப் புகழ்பெற்று மக்கள் மனங்களிலும் அவர்கள் குடும்ப உறுப்பினரைப் போல் நிலைத்துவிட்டவர்களில் இன்று (ஆகஸ்ட் 1) பிறந்த நாள் கொண்டாடும் டெல்லி கணேஷ் முக்கியமானவர்.
1976-ல் வெளியான 'பட்டணப் பிரவேசம்' படத்தில் நடிகராகத் திரைத் துறைக்கு அறிமுகமானார் டெல்லி கணேஷ். ஆம், இயக்குநர் சிகரம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய அசாத்திய திறமையாளர்களில், சாதனையாளர்களில் ஒருவர்தான் டெல்லி கணேஷ். 1979இல் துரை இயக்கத்தில் வெளியான 'பசி' படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று.
இரண்டு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற அந்தப் படத்தில் டெல்லி கணேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அதேபோல் 1985-ல் பாலசந்தர் இயக்கி காவிய அந்தஸ்தைப் பெற்றுவிட்ட 'சிந்து பைரவி' படத்தில் குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்ட மிருதங்கக் கலைஞராக வெகு சிறப்பாக நடித்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார்.
1980-களில் தொடர்ந்து பல படங்களில் பல வகையான துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த விசுவின் படங்களில் டெல்லி கணேஷுக்கு குறிப்பிடத்தக்கத் துணைக் கதாபாத்திரங்கள் அமைந்தன. ரஜினி, கமல் படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்தார். 1987-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி இன்று உலக அளவில் புகழ்பெற்றிருக்கும் 'நாயகன்' திரைப்படத்தில் மும்பை தாராவியில் வாழும் தமிழராக வேலு நாயக்கரின் இந்தி மொழிபெயர்ப்பாளராக நடித்துப் பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.
இப்போதும் தலைமுறை ரசிகர்களும் 'நாயகன்' படத்தைப் பார்த்தால் அதில் டெல்லி கணேஷின் யதார்த்தமான நடிப்பை வியக்காமல் இருக்க முடியாது. பாலசந்தரின் 'புன்னகை மன்னன்' படத்தில் கமலின் பொறுப்பற்ற அதே நேரம் குற்ற உணர்வு மிக்க தந்தையாக உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்தவர் 1981இல் வெளியான 'எங்கம்மா மகராணி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். விசுவின் 'சிதம்பர ரகசியம்', கமல்ஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' போன்ற சில படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் காமேஸ்வரன் கமலுக்கு சமையல்காரத் தந்தையாக பாலக்காட்டுத் தமிழ் பேசி நகைச்சுவையிலும் பட்டையைக் கிளப்பினார்.
கமல் - கிரேசி மோகன் கூட்டணியில் அமைந்த 'அவ்வை சண்முகி' படத்தில் கமல், ஜெமினி கணேசன்,. நாகேஷ், எல்லோரையும் தாண்டி சுயநலமும் குயுக்தியும் நிறைந்த நபராக டெல்லி கணேஷின் நடிப்பு மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருந்தது. அந்தப் படத்திலும் அவருடைய நகைச்சுவைக் காட்சிகள் விலா நோகச் சிரிக்கவைப்பவை. 1990-களில் எல்லா முன்னணி நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் பணியாற்றினார்.
2000-க்குப் பின் தந்தை, தாத்தா போன்ற முதிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அவருடைய நிஜ வயதும் அதற்குத் தோதாக அமைந்தது. இந்தக் காலகட்டத்திலும் பல படங்களில் மனதைக் கனிய வைக்கும் உணர்வுபூர்வமான நடிப்பையும் விஜய்யுடன் நடித்த 'தமிழன்' போன்ற படங்களில் அசத்தலான நகைச்சுவை நடிப்பையும் தொடர்ந்து வழங்கி வந்தார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் தந்தையாக ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மகளின் கையறு நிலையை மாற்ற எதுவும் செய்ய முடியாத தந்தையின் தவிப்பை வசனமே இல்லாமல் மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருந்தார். 600-க்கு மேற்பட்ட திரைப்படங்களைக் கடந்து இன்றுவரை வெற்றிகரமாகத் தொடர்கிறது டெல்லி கணேஷின் நடிப்புப் பயணம்.
ஆரவாரமில்லாமல் சற்று அடங்கிய தொனியில் அதே நேரம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடிப்பதில் டெல்லி கணேஷுக்கு ஒரு தனித்திறமை இருந்தது. அது தமிழ்த் துணை நடிகர்களில் வெகு சிலருக்கே வாய்க்கப்பெற்ற பண்பு. நடிப்புத் திறமை மட்டுமல்லாமல் எளிமை, அப்பாவித்தனம், நட்பார்ந்த பாவம் ஆகியவற்றை முன்னிறுத்தும் முகமும் தோற்றமும்கூட டெல்லி கணேஷை மக்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக்கிவிட்டன.
ஒருமுறை கரிச்சான் குஞ்சு என்ற எழுத்தாளாரைப்பற்றி பாராட்டி பேச இவரை கும்பகோணத் துக்கு அழைத்தார்களாம். கரிச்சான் குஞ்சு பற்றி இவருக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது என்பதால் அவரை பற்றி பலரிடம் விசாரித்துள்ளார்.
'அவர் நல்ல எழுத்தாளர் ஆனால் அவரைப்பற்றி முழுவிவரம் தெரியாதே.. என்றுதான் பலரும் உதட்டை பிதுக்கியுள்ளார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் நாளை அவரை எப்படி பாராட்டி பேசுவது என்று புரியாமல் தவித்தார் டெல்லி கணேஷ். மறுநாள் கும்ப கோணம் போக வேண்டிய நிலையில் முதல் நாள் மாலையில் வாத்தியார் ராமன் நாடகம் ஒன்று ராணி சீதை அரங்கில் நடந்தது. அதில் கலந்துகொண்டார். நாடகத்தை பார்த்துவிட்டு அங்கிருந்தவரிடம் புகழ்ந்துக்கொண்டி ருந்தபோது அதைகேட்டவர் 'இதென்னங்க பிரமாதம் கரிச்சான் குஞ்சு என்ற எழுத்தாளர் எழுதுவதை படித்துப்பாருங்கள் என்று கூற டெல்லி கணேஷுக்கு ஒரே ஷாக்.
'கரிச்சான் குஞ்சா.. அவரை உங்களுக்கு தெரியுமா?' என்றதும் அந்த நபரோ 'தெரியுமாவா? நான் அவரோட மாணவர்' என்றதும் கணேஷுக்கு ஒரே மகிழ்ச்சி அவரிடமே கரிச்சான் குஞ்சு வாழ்க்கை பற்றிய விவரங்களை சேகரித் துக்கொண்டு மறுநாள் கும்பகோணம் சென்று மேடையில் அவரைப்பற்றி விரிவாக பேசி அங்கிருந்தவர்களை அசர வைத்தார் டெல்லி கணேஷ்.
கரிசான் குஞ்சுவின் திறமையை உணர்ந்து கொண்ட டெல்லி கணேஷ். அவரிடம் 'எனக்கு ஒரு கதை எழுதி கொடுங்கள் அதை தூர்தர்ஷனில் நாடகமாக போடுகிறேன்' என்றார். அவரும் எழுதி கொடுக்க சம்மதித்தார்.
நாடக காட்சிகளை போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பினார் கரிச்சான் குஞ்சு.. அதை நாடகமாக்கினார் டெல்லி கணேஷ்.
ஒருநாள் டெல்லி கணேஷிடன், 'நான் உயிரோடு இருப்பதற்குள் இந்த நாடகத்தை பார்க்க முடியுமா?' என்று கேட்க கரிச்சான் குஞ்சு கேட்க
'அது தெரியாது.. இது தூர்ர்ர்ர்தர்ஷன் ரொம்ப தூரத்தில் இருக்கிறது. அவர்கள் போடும்போது பார்க்க வேண்டியது தான்' என்றார் டெல்லி கணேஷ். கரிசான் குஞ்சு நினைத்ததுபோலவே அவர் இறந்து பிறகுதான் அந்த நாடகம் ஒளிபரப்பானது. அதற்கு சன்மானமாக ரூ 40 ஆயிரம் கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டுபோய் கரிசான் குஞ்சு மனைவியிடம் டெல்லி கணேஷ் கொடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு கண்கலங்கிய கரிச்சான் குஞ்சு மனைவி, 'இதுவரை இவர் எழுத்திற்கு 50 ரூபாய்க்கு மேல் யாரும் தந்ததில்லை, நீங்கள் 40 ஆயிரம் தருகிறீர்களே. என்னைவிட நீங்கள் வயதில் மூத்தவராக இருந்திருந்தால் உன்கள் காலில் விழுந்திருப்பேன்' என கரிசான் மனைவி சொல்ல அதைக் கேட்டு டெல்லி கணேஷ் நெகிழ்ச்சியில் உடல் சிலிர்த்துப் போனார். இந்த சம்வத்தை ஒரு மேடை யில் டெல்லி கணேசே கூறினார். டெல்லி கணேஷ் இதுவரை 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.
தமிழக அரசின் விருதையும் கலைமாமணி விருதையும் வென்றிருக்கிறார். அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று மனதார வாசகர்களாகிய நீங்களும் வாழ்த்துங்கள்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu