தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் ரஜினி: சிறந்த நடிகர் தனுஷ்
குடியரசு துணைத்தலைவரிடம் இருந்து விருதை பெற்ற ரஜினிகாந்த்.
திரைத்துறையில் நாட்டின் மிக உயரியதாகக் கருதப்படுவது, தாதா சாகேப் பால்கே விருது. 2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது, ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளால், இவ்விழா நடைபெறாமல் இருந்தது.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் இன்று தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ரஜினிகாந்திற்கு, தாதா சாகேப் பால்கே விருதை, குடியரசுத்துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார்.
தமிழகத்தில் நடிகர் சிவாஜி, இயக்குனர் கே. பாலசந்தருக்கு பிறகு தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளர். விழாவில் பேசிய ரஜினி, இவ்விருதை தனது குரு பாலசந்தருக்கு சமர்ப்பிப்பதாகக் கூறினார்.
இதேபோல், சிறந்த நடிகராக, 'அசுரன்' படத்துக்காக தனுஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு, சிறந்த துணை நடிகர் விருது கிடைத்தது. பார்த்திபன் இயக்கத்தில் உருவான 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருதும் வழங்கப்பட்டது.
சிறந்த பிராந்திய மொழி படமாக, 'அசுரன்' பெற்றது. 'கேடி (எ) கருப்புதுரை' படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, இசையமைப்பாளர் டி.இமானுக்கு, 'விஸ்வாசம்' படத்துக்காக, சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருதும் வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu