நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

வேலையில்லா பட்டதாரி படத்தில், நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சி குறித்த வழக்கு, ரத்து செய்யப்பட்டது. நடிகர் தனுஷ். (கோப்பு படம்).
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. தணிக்கை துறை அறிவுறுத்தலின் படி இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம், நடிகர் தனுஷ் மற்றும் பட தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யவும், புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் தனித் தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அவர்கள் இருவரும் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த இரு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் முன்பு கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பர தடை மற்றும் வர்த்தகம் விநியோக கட்டுப்பாட்டு சட்டம் 2003 பிரிவு 5 இன் கீழ் இந்த புகார் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், இந்த விதி புகையிலை பொருட்களின் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள் அல்லது விநியோகஸ்தர்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிட்டார்.
சிகரெட்டை விளம்பரபடுத்தவில்லை என்றும், விளம்பரம் என்று கூறப்படும் காட்சி, படத்தின் தயாரிப்பாளருக்கு எதிராகவோ அல்லது அதில் உள்ள கலைஞர்களுக்கு எதிராகவோ பொறுந்தாது என வாதிட்டார். ஏற்கெனவே படம் தணிக்கை வாரியத்தால் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு தணிக்கை மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
புகார் தருவதற்கு முன்பு விளக்கம் தர எந்த ஒரு வாய்ப்பையும் வழங்கவில்லை என்றும் மனுதரார்க்கு எதிரான புகார் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
வாதங்கள் நிறைவடைந்த்தை தொடர்ந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, புகார் மீது விசாரணை நடத்த முகந்திரம் இல்லை. எனவே மனுதரார்களுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை ரத்து செய்வதாக தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu