நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை

நடிகர் ராகவா லாரன்ஸ்.
நடன இயக்குநராக இருந்து அதன் பிறகு சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகர் ராகவா லாரன்ஸ் முனி என்ற திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து, அவர் நடித்த மொட்ட சிவா, கெட்ட சிவா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்குநர் கதிரேசன் இயக்கி உள்ள ’ருத்ரன்’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அந்த திரைப்படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து இருந்தது.
12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தி இருந்தது. இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக, மத்தியஸ்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்து உள்ளதாகவும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் ரெவன்ஸா குளோபல் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு அவர் தள்ளிவைத்தார்.
இந்த தடையை நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் இன்று அதே நீதிபதி முன்பு ஆஜராகி கோரிக்கை வைத்தார். அதை கேட்ட நீதிபதி வழக்கு நாளை விசாரிப்பதாக தெரிவித்து உள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu