வாழ்த்தும்… நன்றியும்... பிரதமர் நரேந்திர மோடி - இசைஞானி இளையராஜா..!
பிரதமர் மோடி மற்றும் இளையராஜா.
ஒட்டுமொத்த உலகத்தமிழினத்தின் வாழ்விடங்களெங்கும் உள்ள காற்றலைகளில் இசைஞானி இளையராஜாவின் இசை ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த இசையின் விரல்பிடித்தே பலரது பயணங்கள் எளிதாகவும் இனிமையாகவும் கடக்கின்றன என்பதில் எவர்க்கும் மாற்றுக் கருத்துகள் இல்லை எனலாம்.
அந்த இனிய இசையின் நாயகனான இளையராஜாவுக்கு மத்திய அரசு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கி அழகு பார்த்திருக்கிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இளையராஜாவின் படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது. எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளைப் படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது" என்று தனது வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில் இசைஞானி இளையராஜா, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதில் பதிவிட்டுள்ளார். அதில், "பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசை, கலை மற்றும் கலாசாரத்தின் அழகை நம் சமூகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பு இது.
மேலும், என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாததால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி" என்று ட்விட்டரில் பதிலளித்து தனது நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu