அமைச்சர் பற்றி சர்ச்சை கருத்து: தமிழ் சீரியல் நடிகைக்கு சிக்கல்
ஷர்மிளா
கடந்த 1990களில், டிவியில் டாக்டர் மாத்ருபூதத்தின் நிகழ்ச்சி, மிகப்பிரபலம். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர், டாக்டர் ஷர்மிளா. ஒருசில சினிமாக்களில் தலைகாட்டிய இவர், பின்னர், டிவி பக்கம் முழுமையாக திரும்பினார்.
பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ‛செண்பகம்' என்கிற கதாபாத்திரத்தில், டாக்டர் ஷர்மிளா நடித்து வருகிறார்.நடிப்பதுடன் மட்டுமின்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் அரசியல் கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார். விசிக ஆதரவாளரான டாக்டர் ஷர்மிளா, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்து, அண்மையில் கருத்து பதிவிட்டிருந்தார். 'மூச்சுவிட மட்டும் தான் இன்னும் இவர் வரி விதிக்கல' என்பது போன்ற ஷர்மிளாவின் பதிவுகள், பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் வசந்த் பாலாஜி என்பவர், ஆன் லைன் மூலம் தேனி போலீசாருக்கு, அண்மையில் புகார் ஒன்றை அனுப்பினார். அதில், தொலைக்காட்சி செய்திப்பதிவு போல் போலி செய்தியை பகிர்ந்து, நிதி அமைச்சர் குறித்து தவறான கருத்தை சமூக வலைதளத்தில் பரப்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு, தேனி சைபர் க்ரைம் போலீசார், நடிகை ஷர்மிளாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அத்துடன், ஷர்மிளாவின் சமூகவலைதள பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது, சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu