நகைச்சுவைக் கலைஞன் கல்லாப்பெட்டி சிங்காரம் காலமான தினமின்று
தமிழ்த்திரை உலகில் ஒரு காந்தக் குரல் என்று தனித்துவ அடையாளத்துடன் 80களில் கோலூச்சிய குறிப்பிடத்தக்கவர் கல்லாப்பெட்டி சிங்காரம்
இப்போது கோலிவுட் ஆகி போன தமிழ்த்திரை உலகில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் கொடிகட்டிப் பறந்துள்ளனர். அவர்களில் பல பேரை நாம் மறந்து விட்டோம். சந்திரபாபு, சுருளிராஜன், மனோரமா, வி.கே.ராமசாமி, எஸ்எஸ்.சந்திரன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, வையாபுரி, தாமு, சந்தானம் இவர்களைத் தான் நாம் நினைவில் வைத்திருக்கிறோம்.
ஆனால், இவர்களைப் போல பல திறமைசாலிகள் அந்தந்த காலகட்டங்களில் மட்டுமே புகழ்பெற்று காணாமல் போய்விட்டார்கள்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கல்லாப்பெட்டி சிங்காரம். இவரது படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. பெரும்பாலும் கே.பாக்யராஜ் இயக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். வெள்ளந்தியான முகத்தோற்றம். திருட்டு முழி, கொஞ்சம் கோவை பாஷை, ஆடு மனிதனைப் போல மிமிக்ரி செய்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு காந்தக் குரல் என்று தனித்துவ அடையாளத்துடன் 80களில் கோலூச்சிக் கொண்டிருந்த அந்த நகைச்சுவைக் கலைஞன் கல்லாப்பெட்டி சிங்காரத்தை எப்படி மறக்க முடியும்?
மோட்டார் சுந்தரம்பிள்ளை, சுவரில்லாத சித்திரங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, இன்று போய் நாளை வா, ஒரு கை ஓசை, கதாநாயகன் என 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சொந்தமாக நாடகக் குழு வைத்து பல நாடகங்களை மேடை ஏற்றியுள்ளார்.
பாக்யராஜ் சிங்காரமுடன் அறிமுகமான போது அவரது வெளிப்படையான அம்சங்கள், நடிப்பு மற்றும் நடை, பாடி லாங்குவேஜ் ஆகியவை அவரைக் கவர்ந்தன. தொடர்ந்து பாக்யராஜ் வெற்றிகரமாக சினிமாவில் வலம்வந்த சமயத்தில் அவரை நன்கு பயன்படுத்திக் கொண்டார். பாக்யராஜ் முதன்முதலில் சிங்காரத்தை சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் தான் கல்லாப்பெட்டி சிங்காரத்தை அறிமுகப்படுத்தினார். பாக்யராஜூக்கும் இந்தப் படம் தான் அவரது இயக்கத்தில் வெளியான முதல் படம்.
அந்தப் படத்தில் பாக்யராஜின் அப்பாவாக கல்லாப்பெட்டி சிங்காரம் நடித்து இருப்பார். அடேய்…அடேய்;…அழகப்பா…இது உனக்கே அடுக்காதுப்பா….என பாக்யராஜைப் பார்த்து கோபப்படுவார். அதிலும் கூட நமக்கு அவரது காமெடி தான் வெளியில் தெரியும். அதேபோல் அதே படத்தில் கவுண்டமணியின் தையல் கடையில் உட்கார்ந்து கொண்டு கண்ணடிச்சா வராத பொம்பளை…கையப் புடிச்சி இழுத்தா மட்டும் என்ன வந்துடவா போறா..? என்று திரும்ப திரும்ப கேட்டு விட்டு, பின்னால் நிற்கும் காந்திமதியைப் பார்த்து அசடு வழிவார்…அப்படி பயந்தபடியே ஒரு திருட்டு முழி முழப்பார் பாருங்கள்.
அந்தக் காட்சியை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. அப்படி ஒரு டைமிங் காமெடியை அன்றே அரங்கேற்றியவர் தான் கல்லாப்பெட்டி சிங்காரம். திருட்டு முழி போடும் நாயகர்கள் இவரிம் இருந்து தான் அதைக் கற்று இருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் ஒரு தத்துவத்தை சொல்லி இருப்பார் பாருங்கள். எடுத்து ஊத்திக்கிட்டா என்ன….எறங்கி முங்குனா என்ன….எப்படியும் குளியல் ஒண்ணு தானடா…என்ற டயலாக் அவரது குரலில் கேட்கும்போது அடேங்கப்பா….என சொல்ல வைக்கும்.
கமல் நடித்த காக்கிச்சட்டை படத்தில் கமலை போலீஸ் வேலைக்குத் தயார் செய்யும் பொறுப்புள்ள அப்பாவாக நடித்து இருப்பார் கல்லாப்பெட்டி சிங்காரம்.
உதய கீதம் படத்தில் திருட்டு தொழில் செய்யும் கவுண்டமணியின் அப்பாவாக நடித்து அவரையே காமெடியில் ஓவர்டேக் செய்து விடுவார்.
அப்பேர்பட்ட கல்லாப்பெட்டியார் காலமான தினத்தை நினைவூட்டி இயக்குநர் கே.பாக்யராஜூடம் பேச்சுக் கொடுத்த போது சொன்ன சேதியிது
தேனாம்பேட்டை சிக்னல் அருகில் 92 சி என்றொரு மேன்ஷன் இருந்தது. அந்த மேன்ஷனில் நான் இருந்தேன். கவுண்டமணி அடிக்கடி வந்துபோவார். செந்தில் இருந்தார். சங்கிலி முருகன் இருந்தார். அப்போது அவரை எல்லோரும் பொதும்பு முருகன் என்றுதான் சொல்லுவார்கள். இவர் நிறைய நாடகம் போட்டுக்கொண்டிருந்தார். அங்கே, சின்னமுருகன் என்பவரும் இருந்தார். இவர் ஆர்.எஸ்.மனோகர் நாடகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ரொம்ப நல்ல மனிதர் இவர். இங்குதான் கல்லாபெட்டி சிங்காரம் இருந்தார். நிறைய நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.
நான் அங்கே இருந்தபோது, அவரின் பேச்சு, பாடி லாங்வேஜ் எல்லாவற்றாலும் ரொம்பவே கவரப்பட்டேன். அவருடைய பாடி லாங்வேஜ் மிகவும் வித்தியாசமாக இருக்கும். தவிர, கல்லாபெட்டி சிங்காரம் கரூர்க்காரர். எனவே, கொங்கு பாஷையில் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
நான் அப்போது இயக்குநராகவில்லை. நாம் இயக்குநரானால், கல்லாப்பெட்டி சிங்காரத்தையெல்லாம் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவரின் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். என் முதல் படம் 'சுவரில்லாத சித்திரங்கள்' பண்ணினேன். அந்தப் படத்தில் இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வந்தேன். கல்லாபெட்டி சிங்காரம் மிக அற்புதமான நடிகர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu