பாட்டுத்தலைவன் டி எம் செளந்தராஜன் காலமான நாளின்று

பாட்டுத்தலைவன் டி எம் செளந்தராஜன் காலமான நாளின்று
X

பாட்டுத்தலைவன் டி எம் செளந்தராஜன் காலமான நாளின்று 

திரையில் கோலோச்சிய எம்ஜிஆர் சிவாஜி ஆகிய இரு பெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றை அழுத்தமாக பதிக்க உதவியவர் இந்த டி.எம்.எஸ்.

பாட்டுத்தலைவன் டி எம் செளந்தராஜன் காலமான நாளின்று - அதையொட்டி நம் ,#இன்ஸ்டாநியூஸ் சினிமா குழுவினர் ஷேர் செஞ்சிருக்கும் நினைவலைகள்..

கோடம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் சிவாஜி ஆகிய இரு பெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றை அழுத்தமாக பதிக்க உதவியவர் இந்த டி.எம்.எஸ்.


கேட்கும் போதே எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அம்புட்டு பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவை. வேறு வேறு விதமாக பாடும் திறமை பெற்றிருந்த டி எம் எஸ் பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல... அதன்பின் இருந்த அவரது உழைப்பு அளப்பரியது.

உரத்த குரலும் அழுத்தமான பேச்சு வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும் இடத்திலிருந்து பாடுவார்... ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன் சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு கண்டத்திலிருந்து சில ஃபார்முலாவில் பாடி அசரடிப்பார். இப்படி தனித்துவம் மிக்கவர் டி.எம்.எஸ். பாடலின் வரிகளை இசையமைப்பாளர் நோட்ஸ்க்கு தக்கபடி பாடிவிட்டு சென்று விடுவதுமட்டுமல்ல ஒரு பாடகரின் பணி என்பதற்கு உதாரணம் டி.எம்.எஸ்.

உயர்ந்த மனிதன் படத்தில் நடுத்தர வயதை கடந்த கதாநாயகன் தன் பால்ய வயது நினைவுகளை பின்னோக்கி பார்த்தபடி பாடும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே பாடல் காட்சியில் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக இயக்குனர் காட்சியை சித்தரித்திருந்தார். காட்சிக்கு உயிரூட்ட ரிக்கார்டிங் அறையில் குறிப்பிட்ட வரிகளை பாடும் முன் பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார். காட்சி தத்ரூபமாக பொருந்தி பாராட்டுக்களை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.

கண் புருவத்திலும் தன் நடிப்பை வெளிக்காட்டும் சிவாஜியையே கூட சமயங்களில் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் டி.எம்.எஸ். சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற "யார் அந்த நிலவு" பாடல் ரெக்கார்டிங் முடிந்து படப்பிடிப்புக்காக சிவாஜிக்கு தகவல் போனது. நடிக்க வந்த சிவாஜி பாடலைக் கேட்டுவிட்டு சற்று மெனமாகிவிட்டார். அருகிலிருந்து இயக்குனர். "என்னண்ணா ஏதாவது உடம்பு பிரச்னையா... இன்னொரு நாள் படப்பிடிப்பை தள்ளிவைக்கட்டுமா என்றாராம். "வேண்டாம் கொஞ்சம் டயம் கொடு. அண்ணன் இந்த பாடலில் பிய்ச்சி உதறியிருக்காரு. கிட்டதட்ட எனக்கு சவால் கொடுத்திருக்காரு. அவ்வளவு சாதாரணமான இதுக்கு வாயசைச்சிடமுடியாது" என டேப் ரிக்கார்டரை எடுத்துச்சென்று சிலமுறை ரிகர்சல் பார்த்தபின்னரே நடித்துக்கொடுத்தாராம். அதுதான் டி.எம்.எஸ்.

மேதைகள் குழந்தைத்தன்மை கொண்டவர்கள் என்பதற்கு டி.எம்.எஸ் -ம் விதிவிலக்கல்ல. திரையுலகில் யார்மீதும் அவர் பொறாமை கொண்டவரல்ல அவர். மாறாக திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின் பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி 'சென்னைக்கு வாய்யா உனக்கு எதிர்காலம் இருக்கு' என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார். அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி.

கதாநாயகர்களுக்காக குரல் கொடுத்த டி.எம்.எஸ் 1962-ம் ஆண்டு 'பட்டினத்தார்' என்ற படத்தில் தானே க(தை)தாநாயகனாக நடித்தார். அருணகிரிநாதர் என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்த டி.எம்.எஸ். அதில் முருகனை புகழ்ந்து "முத்தைத் திருபத்தித் திருநகை" எனும் பாடலை பாடியிருந்தார். தான் பாடும் பாடலின் பொருளை அறிந்தபின்னரே பாடும் வழக்கமுடைய டி.எம்.எஸ் இந்த பாடலை பாடும் முன் கிருபானந்தவாரியாரிடம் நேரில் சென்று அதற்கான பொருளைக் கேட்டறிந்த பின்னரே பாடினார். புகழ்பெற்ற அந்த பாடலைக் கேட்ட அவரது பையன்களில் ஒருவர், "அப்பா, உனக்கு சிவாஜி குரல் கொடுத்தாரா" என கேட்க விழுந்து விழுந்து சிரித்தாராம் டி.எம்.எஸ்.

இவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்லாயிரம் திரை இசைப் பாடல்களையும் மற்றும் பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். டி.எம்.சவுந்திரராஜன்.

இசை அமைப்பாளர்கள், ஜி.ராமநாதன், எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன், ஆகியோர், டி.எம்.சவுந்திரராஜனை முழுமையாக பயன்படுத்தி, அருமையான பாடல்களை கொடுத்தனர். கண்ணதாசன், எம்.எஸ்.வி., டி.எம்.எஸ்., கூட்டணியில், உருவான பாடல்கள், சாகாவரம் பெற்றவை.இசை அமைப்பாளர்கள்,

அவரது மறைவு, அவரது பாடல்களை – அவரது வளமிக்க குரலை மேலும் நிரந்தரமாக்கவே செய்கிறது. கிராமப்புற திருமண இல்லங்களின் ஒலி பெருக்கிகளில், நகர்ப்புற இசைக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலில், ஆலய திருவிழாக்களில், மன்றங்களின் கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத குரலாக டி எம் எஸ் ஒலித்துக் கொண்டு தான் இருப்பார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா