என்னை 63 ஆண்டுகளாக வாழ வைத்தது சினிமாதான்: கமல்ஹாசன் நெகிழ்ச்சி..!
கமல்ஹாசன் ரசிகர்கள், படத்தை வெளியிட்ட ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ஆகியோர் சார்பாக கோவையில் உள்ள கேஜி சினிமாஸ் திரையரங்கில் நடைபெற்ற வெற்றி விழாவில் பேசிய கமல்ஹாசன்
நிகழ்ந்து கொண்டிருக்கும் 2022-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ஆண்டாகும். ஆம், நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்-2' இந்த ஆண்டு இதுவரை திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களில் பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பெற்ற படம் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறது. அதோடு, திரையரங்கில் நூறு நாட்களைக் கடந்த 500 கோடி ரூபாய் வசூல் சாதனையைப் பெற்ற படம் என்கிற பெயரையும் நிலை நிறுத்தியிருக்கிறது.
மேலும், கோவையில் 42 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் பிரபல கேஜி சினிமாஸ் திரையரங்கில் அதிகபட்சமாக இரண்டு கோடியே ஐம்பது லட்சம் வசூலித்து சாதனை படைத்துள்ளது. உலகம் முழுதும் 'விக்ரம்-2' வெளியான வேறு எந்தத் திரையரங்குகளிலும் இவ்வளவு அதிகமான வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சென்னையில் உள்ள பிவிஆர் கோவையில் கேஜி சினிமாஸ், தர்மபுரியில் டிமேக்ஸ் டிஎன்சி ஆகிய மூன்று திரையரங்கங்களில் மட்டுமே 'விக்ரம்-2' நூறு நாட்களைக் கடந்து ஓடியுள்ளது. இவற்றில் கோவை கேஜி சினிமாஸில் இன்னமும் தொடர்ந்து படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், கமல்ஹாசன் ரசிகர்கள், படத்தை வெளியிட்ட ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ஆகியோர் சார்பாக கோவையில் உள்ள கேஜி சினிமாஸ் திரையரங்கில் நேற்று உற்சாகம் பொங்க வெற்றி விழா நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், ''யாரென்றே அடையாளம் தெரியாத குழந்தையாக 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் நடித்தபோது, போகும் இடங்களிலெல்லாம் 'நீதானா அந்த புள்ள' என்று கேட்பார்கள். சந்தோஷமாக இருக்கும். ஆனால், ஆரம்ப காலத்தில் நான்கு படங்களில் நடித்தும் என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை.
பத்து பேர்கூட நம்மை கண்டுகொள்ளவில்லையே என்ற கவலை என்னுள் இருந்தது. அதை மாற்றவேண்டும் என்று உழைத்தேன். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்வார்கள். அதுபோல், வந்தாரை வாழைவைப்பது சினிமாவும்தான்'.என்னை கடந்த 63 ஆண்டுகளாக வாழவைத்தது இந்த சினிமாதான். நான் படிச்சதெல்லாம் கலைஞர்களைத்தான். நல்ல சினிமாக்களை ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள். நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள். என்னை மட்டுமல்ல. நன்றாக நடிக்கும் எல்லா நடிகர்களையும் வாழ்த்துங்கள்.
இப்போது, தென்னிந்திய சினிமாவின் பக்கம் எல்லோருடைய பார்வையும் திரும்பியிருக்கிறது. வட இந்தியாவில், 'என்னங்க எல்லாம் அந்தப் பக்கமே ஒளி திரும்பிடுச்சு' என்று கூறி பயப்படுகிறார்கள். புதிதாக வரக்கூடிய நடிகர்களை நான் உற்று கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன்." என்று பேசினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu