எந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்..! இயக்குநர் செல்வராகவன்
நானே வருவேன் படத்தில் வித்தியாசமான கெட்அப்பில் நடிகர் தனுஷ்
தமிழகத்தில் வருடந்தோறும் தீபாவளி, பொங்கல் ஆகிய முக்கிய பண்டிகை தினத்தில் முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கமான நடைமுறையாகும்.ஆனால் காலம் மாறியதின் விளைவு இப்போது இடையிடையே முக்கிய தினங்களிலும் புதுப்புது படங்கள் ரிலீஸ் செய்வதை கோலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்கள் முடிவு செய்து வெளியிடுகின்றனர்.
ஒட்டுமொத்த உலகமே இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' பட வெளியீட்டை எதிர்பார்த்திருந்த வேளையில்… எங்கும் 'பொன்னியின் செல்வன்' படம் குறித்த பேச்சே பரவலாகப் பேசப்பட்டு வந்திருந்த வேளையில், தங்கள் படத்தின் மீது வைத்த நம்பிக்கையும், தங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மனத்தில் நிறுத்தி இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவான 'நானே வருவேன்' திரைப்படத்தை 'பொன்னியின் செல்வன்' வெளியாகும் முந்தைய நாளான செப்டம்பர் 29-ம் தேதியே உலகமெங்கும் வெளியிட்டனர்.
நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், படம் வெளியான முதல் நாளே ரசிகர்களின் கொண்டாட்டமும் வரவேற்பும் நேர்மறையான விமர்சனங்களும் 'நானே வருவேன்' படத்துக்கு எதிர்பார்த்த வசூலையும் பாராட்டையும் ஒருசேர கிடைத்தது. படத்தில், நாயகியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகிபாபு, இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'நானே வருவேன்' படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் செல்வராகவன், ''இந்தப் படத்தை பலர் 'ஆளவந்தான்' கதைபோல் இருப்பதாகக் கூறுகின்றனர். அண்ணன் கெட்டவன், தம்பி நல்லவன் என்று பல படங்கள் வந்துள்ளன. ஒரே ஒரு பாயிண்டை மட்டும் எடுத்துக்கொண்டு, 'ஆளவந்தான்' படத்தோடு இப்படத்தை ஒப்பிடக்கூடாது. 'நானே வருவேன்' படத்தின் கதையே வேறு.
மேலும், தனுஷ் மீண்டும் இணைந்து என்னுடன் பணிபுரிய வேண்டும் என கேட்டிருந்தார். இதனால், பல ஸ்கிரிப்ட் குறித்து இருவரும் பேசினோம். 'நானே வருவேன்' கதை குறித்து, குறைந்தபட்சம் நூறு முறையாவது மெயில் மூலம் மாறி மாறி நானும் தனுஷும் பேசியிருப்போம். அதனையடுத்து, பல யோசனைகளுக்குப் பின்தான் 'நானே வருவேன்' கதையைத் தேர்வு செய்தோம்.
தனுஷ் மிகவும் சென்சிடிவ்வான ஸ்கிரிப்ட் ரைட்டர். 'நானே வருவேன்' கதையை மிகவும் ஆழமாக எழுதியிருக்கிறார். கதையைப் படித்ததும் நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். இப்படி ஆழமாகப் பாடல், கதை எல்லாம் எப்படி எழுதுகிறார் என்றும் யோசித்து இதை அவரிடமே பலமுறை கேட்டுள்ளேன்.
பெரிய பட்ஜெட் படமான 'பொன்னியின் செல்வன்' படத்துடன் மோதவிட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தசரா விடுமுறை என தொடர்ந்து ஒரு எட்டு நாள் விடுமுறை வந்ததால், இந்தப் படத்தை ரிலீஸ் செய்தோம். முன்பு பண்டிகைக் காலத்தில் நான்கைந்து படங்கள் வெளியாகும். மக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து பார்ப்பார்கள் அது இப்போது இல்லை. அந்தப் பழைய பண்டிகைக் கொண்டாட்டத்தைக் கொண்டுவர நினைத்தோம்'' என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu