சில்லா.. சில்லா... அஜித்தின் துணிவு பட பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்தார் இயக்குநர் வினோத்..
துணிவு பட போஸ்டர்.
தமிழ்நாட்டில் பண்டிகையையும், திரைப்படத்தையும் எப்போதும் பிரித்து பார்க்க முடியாத நிலையே இருந்து வருகிறது. தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படம் ஏதும் வெளியாகாத நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முன்னணி நடிகர்களான அஜித்குமார் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு படங்கள் வெளியாகிறது என்பதால் இரட்டை சந்தோஷத்தில் உள்ளனர் திரைப்பட ரசிகர்கள்.
விஜய் நடித்த வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. பாடல் வெளியாகி சக்கை போடு போடுகிறது. இணையதளத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த பாடலை பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய் குரலில் இருப்பது கூடுதல் பலம். அந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் அதை பெருமையாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதேபோல, நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்திற்கும், அதன் பாடல்களுக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித்-வினோத் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா.. சில்லா... என்ற பாடல் வரிகளை வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். அந்த பாடலை அனிருத் பாடியிருப்பது இன்னும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. வைசாக் என்பவர் இந்த பாடலை எழுதி உள்ளார்.
இந்தநிலையில், துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா.. சில்லா.. பாடல் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது என அந்த படத்தின் இயக்குநர் வினோத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்தோடு, பாடல் தீயாக இருக்கும் என்பதற்கு அடையாளமாக தீப்பொறி போன்ற படத்தை இரண்டு முறை வினோத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
படம் வெளியான பிறகுதான் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, விஜயின் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. பாடலுக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா.. சில்லா... என்ற பாடலும் களம் இறங்க இருப்பது இருவரின் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
வழக்கமாக இணையதளத்தில் அஜித்-விஜய் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கடுமையாக விமர்சித்து வாசகங்களை பதிவு செய்தவது உண்டு. ரஞ்சிதமே.. ரஞ்சிதமே... பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே அந்தப் பாடலின் மெட்டு பழைய படமான உளவாளி படத்தில் இடம்பெற்றுள்ள மொச்சக் கொட்ட பல்லழகி.. முத்துமுத்து சொல்லழகி... என்ற பாடலைப் போல இருப்பதாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
வாரிசு, மற்றும் துணிவு படங்களுக்கான டீஸர், டிரைலர் ஆகியவை இன்னும் வெளியிடப்படாத நிலையில், தற்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu