முதல்வர் மு.க.ஸ்டாலின் என் மீது காட்டிய அன்பு பெரிது: டி.ராஜேந்தர் நெகிழ்ச்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் என் மீது காட்டிய அன்பு பெரிது: டி.ராஜேந்தர் நெகிழ்ச்சி
X
இயக்குநர் டி.ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன்பாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பன்முகத் திறமைவாய்ந்த இயக்குநர் டி.ராஜேந்தர் அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவரது உடல் நலனில் முன்னேற்றம் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டில் உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். எனவே, அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை நடிகர் சிலம்பரசன் விரைந்து மேற்கொண்டார். தனது தந்தையின் உடல்நலமே தனக்கு முக்கியம் என்று அனைத்து பட வேலைகளையும் சிம்பு தள்ளிவைத்துவிட்டார்.

இந்தநிலையில், நேற்று(14/06/2022) அமெரிக்கா செல்ல புறப்படும் முன்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், "என் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் எனது உடல் நலம் பற்றி நல்லபடியாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும் முதல் நன்றி. இன்று செய்தியாளர்களை சந்திக்கின்ற எண்ணம் எனக்கில்லை. எனது பி.ஆர்.ஓ சொன்னதன் விளைவாகத்தான் நான் உங்களை சந்தித்துவிட்டு புறப்படுகிறேன். நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. என் முகத்தில்தான் தாடி வைத்து இருக்கிறேன். என் வாழ்க்கையில் எதையும் மூடி வைத்தது இல்லை. நான் இன்று இங்கு நிற்பதற்கு எல்லாம் வல்ல இறைவன்தான் காரணம். என்னுடைய தன்னம்பிக்கையை மீறிய கடவுள் நம்பிக்கைதான் காரணம். அந்த முருகன் அருளால்தான் பேசிக் கொண்டிருக்கின்றேன். உயர் சிகிச்சைக்காக இன்றைக்குதான் நான் அமெரிக்கா செல்கிறேன். ஆனால், அதற்கு முன்பாகவே நான் அமெரிக்கா சென்றுவிட்டதாகப் பலர் கதை கட்டிவிட்டார்கள். நானே ஒரு நடிகன், இயக்குநர் எனக்கே கதை எழுதி திரையிட முயற்சிக்கின்றனர்.

நான் வெளிநாடு சென்று மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளக் காரணமே, எனது மகன் சிலம்பரசன்தான் அவன் கேட்டுக் கொண்டதால்தான் நான் ஒப்புக் கொண்டேன். இதற்காக, அவனது படப்பிடிப்புகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு தாய், தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்தக்காலத்தில் பலர், பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுவிடும் நிலையில், எனது மகன் சிலம்பரசன் பெற்றோர்களுக்காக கடின உழைப்பை மேற்கொண்டு வருகிறார். இப்படி ஒரு மகனை பெற்றதற்கும், குருவாக இருந்து ஒரு நல்ல சிஷ்யனை உருவாக்கியதற்கும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

என் மீது அன்பும், பாசமும் காட்டக் கூடிய ஒரே தலைவர் கலைஞர் தான். அவருக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அளவுக்கு என் மீது அன்பு காட்டுவார் என நினைக்கவில்லை. அவர் காட்டிய அன்பு பெரிது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என அனைவரும் நலம் விசாரித்தனர். எனது குடும்பமே என்னுடன் இருக்கிறது. தென்னகத்து மக்கள், என் ஈழத்து மக்கள் என் மீது காட்டிய அன்பு உள்ளவரை எந்த வதந்தியையும் நம்பாதீர்கள். நான், நல்லபடி உயர் மருத்துவ சிகிச்சையை முடித்துக்கொண்டு மீண்டும் வந்து உங்களை சந்திப்பேன்" என்று நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் கூறிவிட்டுப் புறப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!