அயோத்தி திரைப்படத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).
சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். தொடர்ந்து, சுந்தரபாண்டியன், தாரைதப்பட்டை, கிடாரி, படைவீரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள சசிகுமார் நடிப்பில் அண்மையில் வெளியான அயோத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அயோத்தி திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். இந்த நிலையில், அயோத்தி திரைப்படத்தின் திரைக்கதை தன்னுடைய கதை என்று கூறி பேராசிரியர் சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அவரது மனுவில், தான் எழுதி தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் கடந்த 202 0ஆம் ஆண்டு "யாதும் ஊரே"என்ற தலைப்பில் பதியப்பட்ட திரைக்கதையை, தனது அனுமதி இல்லாமல் திருடி 'அயோத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாகவும், படத்தின் திரைக்கதை மீதான உரிமம் தனக்கு சொந்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதால், அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், பிற மொழிகளில் டப்பிங் செய்யும் உரிமையை வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சௌந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இயக்குநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அயோத்தி படத்தின் கதை கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு செய்ததாகவும், மனுதரார் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்தார். ஏற்கெனவே திரையரங்குகளில் படம் வெளியான நிலையில் ஓடிடி, இணையதள உரிமை, தொலைக்காட்சி உரிமைகள் வழங்க கூடாது என்ற கோரிக்கையை ஏற்க கூடாது என்றும் வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து, ஓ டி டி தளத்தில் வெளியிட தடைக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சௌந்தர் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu