டென்ட் கொட்டாயை அறிமுகப்படுத்திய சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்தநாள்

ஆமாமுங்கோ.. 1895ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட். அதாவது தமிழ்நாட்டில் முதன்முதலாக "டுபாண்ட்" எனும் பிரெஞ்சுக்காரர் ஒரு நவீன படக் கருவியுடன் வந்து இறங்கியிருந்தார்.
அவர் சென்று பயாஸ்கோப் நடத்திய இடங்களில் எல்லாம் மக்கள் கூடி வியப்புடன் பார்த்தனர். அப்போது சாமிக்கண்ணுக்கு யோசனை ஏற்பட்டது. அதை வாங்க வேண்டும் என்று நினைத்தார். அப்பொழுது பிரெஞ்சுக்காரர்கள் படக் கருவியை விற்க முடிவு செய்தனர். உடனே சாமிக்கண்ணு மனைவியின் நகைகளை விற்று கையில் இருந்த பணத்தோடு அக்கருவியை வாங்கினார். அதன் பின்னர் இந்தியாவின் முதல் சலனப் படக் காட்சியாளராக சாமிக்கண்ணு உருவெடுத்தார். சாமிக்கண்ணுவின் தந்தை தம்புசாமி கோவை நகராட்சியில் பணி புரிந்தவர் அவர் வீடு டவுன் ஹால் கோட்டைப் பகுதியில் தான் இருந்தது.
கோவையில் இருந்து சாமிக்கண்ணுவின் நடமாடும் பயாஸ்கோப் மாட்டு வண்டிகள் சாதனங்களுடன் கிளம்பி கிராமம் கிராமமாகச் சென்றன. ஓரளவு பணமும் சேர்ந்தது. அதன்தொழில் நுட்பங்களையும் வணிக வாய்ப்புகளையும் அறிந்து கொண்டார். பணமும் புகழும் சேர்ந்தன.
தற்போது வெரைட்டி ஹால் உள்ள இடத்தில் "டிலைட் தியேட்டர்" எனும் நிலையான திரையரங்கைக் கட்டினார். பிறகு அதே சாலையில் எடிசன் எனும் சாமி தியேட்டர் கட்டப்பட்டது. மேலும் சாமிக்கண்ணு சினிமா புரொஜெக்டர் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் ஏஜண்டாக செயல்பட்டு வந்தார். இந்த ஏஜென்சியே தென் இந்தியாவின் எல்லா நகரம், முக்கிய ஊர்கள் என எல்லா இடங்களுக்கும் சலனப் படக் காட்சியை எடுத்துச் சென்றது.
வெரைட்டி ஹால் தியேட்டர் அருகில் ஒரு ஜெனரேட்டர் நிறுவப்பட்டு மின்சாரம் மூலம் தியேட்டர் இயங்கியது. உபரி மின்சாரத்தில் தியேட்டர் முன்பு சாலை விளக்குகள் போடப்பட்டன. அவரது சகோதரர் ஜேம்ஸ் வின்சென்ட் அவருக்கு உறுதுணையாக இருந்தார். ஒரு நேரத்தில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேல் டென்ட் கொட்டகைகள் இவர்கள் வசம் இருந்தன.
அது மட்டுமில்லாம இந்த சாமிக்கண்ணு அச்சகமும், மாவு மில்லும் வைத்திருந்தார். கோவையில் மின்சாரம் மூலம் இயங்கிய அந்த அச்சகத்தின் பெயரே 'எலக்ட்ரிக் பிரிண்டிங் ஒர்க்ஸ்' என்பதாகும். அது அக்காலத்தில் மிகுந்த புகழ் பெற்றிருந்தது. சாதனை மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட் 1942ல் காலமானார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் வின்சென்ட் லைட் ஹவுஸ் (கென்னடி) தியேட்டரைக் கட்டினார். இத்தகைய அரிய செயல் கோயம்புத்தூர்க்கு மட்டுமின்றி தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இன்றும் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu