'இப்படி வெச்சு செஞ்சுட்டாரே கமல்' - அசந்து போன 'பிக்பாஸ்' ரசிகர்கள்
bigg boss tamil kamal haasan talk - நடிகர் கமல்ஹாசன் (கோப்பு படம்)
bigg boss tamil season 6, bigg boss tamil kamal haasan talk- விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ஆர்வத்தை அதிகப்படுத்தி கொண்டே இருக்கிறது. அதிலும் சனி, ஞாயிறு இரண்டு நாள் எபிசோடுகளும் மரண மாஸ் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற வாரம் முதலே பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட சண்டையும், சச்சரவும் நடந்து வந்தது. ஒருவருக்கொருவர் மனதில் இருக்கும் எண்ணங்களை அப்படியே ஆவேசத்தில் பேசியதால், அவர்களது அத்தனை வஞ்சமும் வெளிப்பட்டது.
இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பி உயர்ந்தாலும், ரொம்பவும் ஓவராக நடந்து கொள்ளும் போட்டியாளர்களை கமல் 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில், இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் கமல் 'படபட' என, சரவெடி தவுசண்ட் வாலா பட்டாசாக பொரிந்து தள்ளிவிட்டார். மேலும், 'இதைத்தான் எதிர்பார்த்தோம் வா, தலைவா' என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியை, பார்த்து ரசித்தனர்.
ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் இந்த அதிரடி ஆட்டத்தை தாங்க முடியாத போட்டியாளர்களின் பாடுதான் பெரிய திண்டாட்டம் ஆகி போனது. மேலும் குறும்படம் போட்டு காண்பித்து, போட்டியாளர்களை உலகநாயகன், கதிகலங்க செய்து விட்டார். குறிப்பாக, ஞாயிறு தினம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சுவாரசியங்கள் காத்திருந்தது.
அதில் குழப்பத்துடனே இருந்த ஆயிஷாவுக்கு, கமல் குட்டு வைத்த காட்சிகளும் அரங்கேறியது. அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில், 'நோகாமல் நுங்கு சாப்பிடும் போட்டியாளர்கள் யார்' என்றும், 'சுயமாக யோசிக்காமல் மற்றவர் சொல்வதைக் கேட்கும் நபர் யார்' என்ற சுவாரஸ்யமான விளையாட்டும் பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதற்கிடையில் நாமினேஷனில் இருக்கும் ஜனனி, மகேஸ்வரி, ஏடிகே ஆகியோர் சேவ் செய்யப்பட்ட நிலையில், அதை தொடர்ந்து இறுதி இடத்தில் இருக்கும் அசீம் மற்றும் அசல் இருவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதில் விறுவிறுப்பும், பரபரப்பும் நிகழ்ச்சியில் ஏற்பட்டது. அதில் இத்தனை நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணம் நடந்தே விட்டது. ஆம், பலரது எதிர்பார்ப்பின்படி அதாவது பிக் பாஸ் வீட்டில் 'தடவல் மன்னனாக' இருந்த அசல் கோளார், வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
வெளியே வந்த பின், ' நான் என்ன செய்தேன் என்றே தெரியவில்லை, என்னை வெளியேற்றி விட்டார்கள்' என்று கமலிடம் சொன்ன அசலிடம், ' வெளியே உள்ள உங்கள் நண்பர்களிடம் 'நீங்கள் உள்ளே என்ன செய்தீர்கள்' என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்' என, அவருக்கே உரிய ஸ்டைலில் பதில் அளித்தார் உலக நாயகன். குறும்படம் மூலம், தனலட்சுமி, யாரையும் தள்ளிவிடவில்லை என்பதை உறுதிபடுத்திய கமல், அசீமை தனலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கவும் செய்தார். ஏ.டி.கே., வின் 'மிமிக்ரி' நடிப்பையும் ரசிக்க வைத்தார்.
கடந்த வாரம் வரை, முறுக்கு மீசையுடன் மிரட்டலாக வந்த கமல், சாதுவாக நடந்துகொண்டார். இந்தமுறை மீசை, தாடியின்றி 'அமுல்பேபி'யாக வந்த கமல், பலரையும் மிரட்டல் தொனியில் பேசி கிடுகிடுக்க வைத்தார். குறிப்பாக, மலம் அள்ளும் மனிதர்கள் குறித்து பேசி, சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, அனைவரையும் அசத்தி விட்டார் கமல்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu