வீட்டு வாசலில் காத்திருக்க வேண்டுமா?அன்புமணிக்கு பாரதிராஜா கண்டனம்
பாரதிராஜா
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில், சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ள இயக்குனர் பாரதிராஜா, படைப்பாளிகள் அரசியல்வாதிகள் வீட்டுக்கு முன்பு கதை சொல்ல காத்திருக்கும் நிலை வரும் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடித்து வெளியான திரைப்படம், 'ஜெய் பீம்'. இதில், வன்னியர் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக்கூறி, நடிகர் சூர்யாவிற்கு வன்னியர் தரப்பில் இருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. மன்னிப்பு கேட்பதோடு, 5 கோடி ரூபாய் இழப்பீடு தரக்கோரி, வன்னியர் சங்கம் சார்பில், சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
எனினும், நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக திரையுலகினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். #weStandwithSurya என்ற ஹேஷ்டேக்கும் சூர்யாவுக்கு ஆதரவாக வைரல் ஆகி வந்தது. இந்த சூழலில், இயக்குனர் பாரதிராஜாவும் சூர்யாவுக்கு ஆதரவாக, அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாரதிராஜா எழுதிய கடிதத்தின் சுருக்கம்: திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது. பல சமூக , அரசியல் மாற்றங்களின் பிரதிபலிப்பாக, சினிமா இருந்து வருகிறது. கடந்த கால சம்பவங்களை படைப்பாக காட்டும் போது, சமூகத்திற்கு அது எவ்வாறு பயனளிக்கிறது என்று பார்க்க வேண்டும்; அதில் குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கக்கூடாது.
இன்றைய சமத்துவ அதிகாரத்தை அன்றே பேசியது நாங்கள் தான். அன்று என் படம் 'வேதம் புதிது' முடக்க முயற்சித்தபோது புரட்சித்தலைவர் உடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அது போன்றதொரு படைப்புதான் 'ஜெய் பீம்' படமும். இதைப் படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால், நீங்களும் உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது.
தம்பி சூர்யாவைப் பொறுத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. யாருக்கு பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதி வாசலிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விடக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள் என்று, அன்புமணி ராமதாஸுக்கு, பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu