'கூழாங்கல்' படத்துக்கு சிறந்த திரைப்படவிருது..!

கூழாங்கல் படத்துக்கு சிறந்த திரைப்படவிருது..!
X
புதுச்சேரி அரசு, 'கூழாங்கல்' திரைப்படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

ஆண்டுதோறும் புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியவை இணைந்து திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்தவிழா கடந்த 39 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா புதுச்சேரியில் உள்ள அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் நேற்று(09/09/2022) தொடங்கியது. இந்தவிழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன், சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட 'கூழாங்கல்' திரைப்படத்தின் இயக்குநர் வினோத் ராஜுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கி சிறப்பித்து பாராட்டிப் பேசினார்.

விழாவில் பேசிய அமைச்சர் லட்சுமி நாராயணன், "திரைப்படங்கள் நம்முடைய வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

பொதுவாகவே, எந்த ஒரு அரசு விழாவாக இருந்தாலும் ஒரு 2000 அழைப்பிதழ்கள் அனுப்பினாலும், அவ்விழாவில் சுமார் 20 அல்லது 30 பேர் மட்டுமேதான் கலந்துகொள்வார்கள். ஆனால், இங்கே குழுமியிருக்கிற கூட்டத்தைப் பார்க்கின்றபோது, வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் காட்டுகின்ற ஒரு திரைப்படம் எத்தனை தூரம் எல்லோரையும் ஈர்த்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால், இப்படத்தின் வெற்றியை உறுதியாகப் பார்க்க முடிகிறது.

இயக்குநர் வினோத் ராஜ் போன்ற இயக்குநர்களுக்கு சிறிய விஷயங்களைக்கூட படமாக எடுக்கின்ற அளவுக்கு கற்பனைத் திறனும் பார்வையாளர்களை இரண்டு மணி நேரம் திரைக்கு முன் உட்கார வைக்கிற கருத்துச் செறிவும் உள்ளது என்பதை 'கூழாங்கல்' படத்தின் மூலம் உணர முடிகிறது. வணிக ரீதியாக எடுக்கின்ற படங்களுக்கான வரவேற்பு என்பது தனி.

ஆனால், நாம் வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறபோது, அது எத்தனை விதமான யதார்த்தங்களை உள்ளடக்கியுள்ளது என்பதை அறிந்துகொள்ள, 'கூழாங்கல்' போன்ற படங்கள் நமக்கு அவசியம் தேவையுள்ளதாக இருக்கின்றன.

நமது கண்கள் ஒரு லட்சம் படங்களை எடுக்கும் என்பார்கள். இவற்றைத் தாண்டி கேமராக்களில் வரக்கூடியது எத்தனை அற்புதமாக இருக்கிறது என்பதை புதுச்சேரியின் அழகை திரைப்படங்களில் பார்க்கின்றபோதுதான் தெரிகிறது.

எனவேதான், புதுச்சேரியைச் சார்ந்து எந்த திரைப்படம் வந்தாலும், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் வந்தாலும் அவர்களைப் பெருமைப்படுவதை புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை கடமையாகக் கொண்டிருக்கிறது" என்று பேசினார்.

விழாவில் விருது பெற்ற 'கூழாங்கல்' திரைப்படம் திரையிடப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!