உதயநிதியின் மாமன்னன் திரைப்படத்துக்கு தடை: நீதிமன்றத்தில் மனு தாக்கல்

உதயநிதியின் மாமன்னன் திரைப்படத்துக்கு தடை: நீதிமன்றத்தில் மனு தாக்கல்
X

மாமன்னன் திரைப்பட போஸ்டர்.

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகர் உதயநிதி நாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியது. தற்போது வரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.

இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளார். ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும் எனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் ராமசரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் ராமசரவணன் கேட்டுக் கொண்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள மாமன்னன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். நடிகர் வடிவேலு முக்கிய பாத்திரத்திலும், நடிகர் பகத் பாசில், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture