இனிய கானத்துக்கு சொந்தக்காரர் ஏ எம் ராஜா காலமான நாளின்று

இனிய கானத்துக்கு சொந்தக்காரர் ஏ எம் ராஜா காலமான நாளின்று
X
மென்காற்றில் பட்டம் விடுவது போல மாயக்குரலில் ஜாலம் புரிந்த கானத்துக்கு சொந்தக்காரர் ஏமல மன்மத ராஜூ ராஜா என்ற ஏ.எம்.ராஜா.

மென்காற்றில் பட்டம் விடுவது போல தன் மாயக்குரலில் ஜாலம் புரிந்த இனிய கானத்துக்கு சொந்தக்காரர்தான் ஏமல மன்மத ராஜூ ராஜா எனும் ஏ.எம்.ராஜா.

சிலரது பாடலை காலை கண் விழிக்கும் போது கேட்கப் பிடிக்கும். சிலரது பாடலை பயணத்தின் போது கேட்க விரும்புவோம். சிலரது பாடலை சோகமாக இருக்கும் போது கேட்க தோன்றும் . மொத்தத்தில் நம்மில் பலர் வேலை சுமையின் அலுப்பு தெரியாமல் இருக்க, பாட்டு கேட்டுக் கொண்டே வேலை செய்வது வழக்கம். ஆனால், வாழ்க்கையின் அலுப்பு தெரியாமல் இருக்க, A.M.ராஜாவின் பாடல்களைக் கேட்டால் போதும், நம்மை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இவரது தேன் குரலின் மகிமை அப்படி. சோகத்தின் சாயலும், சந்தோஷத்தின் மையலும் சேர்ந்து கலந்து செய்த கலவைதான் A.M.ராஜாவின் குரலமைப்பு. இரவின் மடியில் இனிமை சேர்க்கும் பாடல்கள் இவருடையது.

நடிகர் மோகனின் குரல் பின்னணி பாடகர் சுரேந்தரனின் குரல் என்றால் எப்படி நம்பாமல் இருந்தோமோ அப்படித்தான் ஜெமினி பாடிய பாடலின் குரல் ஏ.எம்.ராஜா என்றால் நம்ப முடியாது. நூறு சதவீதம் பொருந்தக்கூடிய குரல். இன்றளவும் பிரபலமாய் இருக்கக்கூடிய மிஸ்ஸியம்மா படத்தில் வரும் 'வாராயோ வெண்ணிலாவே' பாடலில் மெட்டுக்கேற்ற வார்த்தைகளும் ராஜாவின் குரலும் தெய்வீகமாய் இருக்கும். அதே படத்தில் வரும் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடல் மெதுவாக நூல் பிடித்தால் போல் ஆரம்பித்து மென்காற்றில் பட்டம் விடுவது போல தன் மாயக்குரலில் ஜாலம் புரிந்திருப்பார்.தேன்நிலவு படத்தில் வந்த 'பாட்டு பாடவா' பாடலும்தான் இப்போதும் இணைந்து முணுமுணுக்க வைக்கும். ஒப்பனையில்லாத குரல்.. தெளிந்த நீரோடை போல் இசையில் வார்த்தைகள் இனிமையாய் காதில் வந்து விழுந்தன. அந்த இனிய கானத்துக்கு சொந்தக்காரர்தான் ஏமல மன்மத ராஜூ ராஜா எனும் ஏ.எம்.ராஜா.

தமிழில் ஜெமினி தவிர்த்து எம்.ஜி.ஆருக்கு பாடிய 'மாசிலா உண்மை காதலே' பட்டி தொட்டியெங்கும் ராஜாவை கொண்டு சேர்த்தது. எஸ்.எஸ்.ஆருக்கு மிகவும் பொருந்திய 'தென்றல் உறங்கிய போதும்' பாடல் எப்போது கேட்டாலும் சலிக்காதவை.1959 ஸ்ரீதரின் கல்யாணப்பரிசு மூலம் இசையமைப்பாளராய் தமிழில் அறிமுகமானார்.'துள்ளாத மனமும் துள்ளும்' பாடலில் அனைவரையும் உருக வைத்திருப்பார். அதிலே 'வாடிக்கை மறந்ததும் ஏனோ' பாடலில் மிதிவண்டியின் வேகத்திற்கு ஏற்ப இசையின் வேகமும் செல்லும்படி இருக்கும். இறுதியில் ஒலிக்கும் 'காதலிலே தோல்வியுற்றான்' பாடலில் படத்தின் மொத்த சாரத்தையும் தனது குரலில் தோய்த்துக் கொடுத்திருப்பார். அதில் வந்த உன்னை கண்டு நானாட பாடலில் இன்பத்திலும் துன்பத்திலும் கேட்கும்போது பொருத்தமாய் இதமாய் இருக்கும்.

தேன்நிலவு படத்தில் வரும் பாட்டுப்பாடவா பாடல் மிகச்சிறந்த துள்ளலிசை பாடலாக.. இடையில் கிட்டாரில் ஒலிக்கும் போது துள்ளல் இசையிலும் ஒரு மென்மை இருக்கும்.அதனை வெகுவாக ரசிக்க வைத்தது. 'சின்ன சின்னக் கண்ணிலே மற்றும் காலையும் நீயே மாலையும் நீயே ஒரு தெய்வீக கானமாகவே ஒலித்தது.'நிலவும் மலரும் பாடுது' பாடலில் இசையும் படகில் பயணம் செய்வது போல் இருக்கும்.இதில் ராஜாவின் குரல் மென்மையாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் லயித்து லயித்துப் பாடியிருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் நன்றாய் இருக்கும். முன்கோபம் மிகுந்த ராஜா அவர்கள் இப்படத்தில் இயக்குநருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் அடுத்த படமான நெஞ்சில் ஓர் ஆலயத்துக்கு இசையமைக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.

ஸ்ரீதர் தவிர மற்ற இயக்குநரின் படங்களிலும் இசையமைத்துள்ளார். கே.சங்கர் இயக்கத்தில் 1962ல் வந்த ஆடிப்பெருக்கு படத்தின் பாடல்களும் இவருக்கு வெற்றியைத் தந்தது. அதில் வரும் தனிமையிலே இனிமை காண முடியுமா பாடல் தத்துவமாகவும் டூயட்டாகவும் கலந்து இருக்கும்.அப்படத்திலேயே சுசிலா பாடும் காவேரி ஓரம் பாடல் அனைவராலும் விரும்பிக் கேட்டவையாகும்.பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குமார் இசையில் ரங்கராட்டிணம் படத்தில் பாடினார்.1973ம் ஆண்டு வீட்டு மாப்பிள்ளை படம் மூலம் மீண்டும் வந்தார்.

இவைகள் தவிர இந்தி, சிங்களப் பாடல்களையும் பாடி உள்ளார். தன்னுடன் பாடிய சக பாடகியான ஜிக்கியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு மகள்கள், இரு மகன்கள் என ஆறு குழந்தைகள். இவரது மகன் சந்திரசேகர், இளையராஜா இசையில் ராசாமகன் படத்தில் காத்திருந்தேன் கண்மணி பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!