அல்லு ஸ்டூடியோஸ் - 'ராமலிங்கையாகாரு'க்கான கௌரவம்..!
நடிகர் அல்லு அர்ஜுன் தனது தாத்தா அல்லு ராமலிங்கையாவை கௌரவப்படுத்தும் விதமாக அவரது நினைவைப் போற்றும் வகையில் ஐதராபாத்தில், அல்லு ஸ்டூடியோஸ் என்ற ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தெலுங்குத் திரையுலகில் கீதா ஆர்ட்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். படங்களைத் தயாரிப்பது மட்டுமின்றி விநியோகஸ்தராகவும் உள்ள பிரபலம். அவரது தந்தையான அல்லு ரமலிங்கய்யா தெலுங்குத் திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், தனது நகைச்சுவை நடிப்பால், டோலிவுட் ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்தவர். அல்லு ராமலிங்கய்யா, கடந்த 2004ம் ஆண்டு மறைந்தார். இந்தநிலையில், அவரது 100வது பிறந்தநாளான நேற்று(01/10/2022), அவர் நினைவாக ஸ்டூடியோ ஒன்றைத் திறந்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.
ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டூடியோவை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி திறந்து வைத்தார். அல்லு ராமலிங்கய்யாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி, வந்திருந்த பார்வையாளர்கள் வி.ஐ.பி.,க்கள் அனைவரையுமே மிகவும் நெகிழ வைத்தது.
அல்லு ஸ்டூடியோஸை திறந்துவைத்த சிரஞ்சீவி, ''அல்லு ராமலிங்கய்யா இந்தக் கும்பத்தின் ஆணிவேராக இருந்தார். இந்தக் குடும்பம் இந்த நிலைக்கு வர அவர்தான் காரணம். சில நடிகர்களுக்கு மட்டும்தான் இந்த அன்பும் மரியாதையும் கிடைக்கும். அல்லு ஸ்டூடியோஸ் லாபத்திற்காக தொடங்கப்பட்டது அல்ல, அது ராமலிங்கய்யாவுக்கான அஞ்சலி'' என்றார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுன், ''அல்லு ஸ்டுடியோவின் பிரமாண்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டதற்காக மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். என் தந்தைக்கு அவரது தந்தையான ராமலிங்கய்யா மீது எப்போதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் அன்பைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. நாங்கள் இந்த ஸ்டுடியோவை கட்டியதற்குக் காரணம், எங்கள் தாத்தா அல்லு ராமலிங்கய்யா காருவை கௌரவிப்பதற்கும் மரியாதை செய்வதற்கும் தான்'' என்று நெகிழ்வோடு குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu