தன்னம்பிக்கையால் தலைநிமிர்ந்த 'தல': இன்று அஜித் பிறந்தநாள்
தொழிலாளர் தினத்தை உழைப்பாளிகள் இன்று கொண்டாடிக் கொண்டிருக்க, சினிமா ரசிகர்கள் 'தல' அஜித்தின் பிறந்தநாளை, உற்சாகம் பொங்க கொண்டாடுகின்றனர். ஆமாம், உழைப்பாளிகளின் தினமான மே 1ம் தேதி, உழைப்புக்கு சலிக்காக நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளாகும்.
படிப்புக்கு முழுக்கு!
கடந்த 1971ம் ஆண்டு மே 1ம் தேதி, ஐதராபாத்தில் பிறந்த அஜித்தின் தந்தை சுப்ரமணியம், பாலக்காட்டு தமிழர். தாய் மோகினி, கொல்கத்தாவை சேர்ந்தவர். இவர்களுக்கு 3 மகன்கள். இவர்களில் இரண்டாமவர் தான், நம்ம அஜித். இவரது அண்ணன் அனூப் குமார், நியூயார்க்கிலும், தம்பி அணில் குமார் சியாட்டலிலும் உள்ளனர்.
பிறந்தது ஐதராபாத் என்றாலும், வளர்ந்தது எல்லாம் நம்ம ஊரு சென்னையில் தான். சென்னை ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே, மோட்டார் வாகனத் துறையில் அஜித்துக்கு ஆர்வமேற்பட்டது. இதனால், படிப்பின் மீது நாட்டம் குறைந்தது. இதனால், படிப்புக்கு முழுக்கு போட்டு, மோட்டார் மெக்கானிக் பணியில் சேர்ந்தார்.
பைக், கார்கள் என்றால் அஜித்திற்கு கொள்ளை பிரியம். பைக் பந்தயத்தை தனது தொழிலாக தீர்மானித்தார். ஆனால், இதற்கு பயிற்சி பெறவும், பங்கேற்கவும் பணம் ஒரு தடையாக இருந்தது. இதனால் என்ன செய்வது என்று யோசித்தபோது, விளம்பர வாய்ப்புகள் அவரை தேடி வந்தன. அதை கச்சியமாக பயன்படுத்திக் கொண்டார் அஜித்.
கம்பளம் விரித்த சினிமா!
சிறுசிறு விளம்பரங்களில் நடித்த அஜித்திற்கு திரையுலகில் கால்தடம் பதிக்கும் அதிர்ஷ்டமும் கதவை தட்டியது. ஆமாம், தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார் அஜித். இதனிடையே பைக் பந்தயங்களில் பங்கேற்ற் போது ஏற்பட்ட காயங்கள், அவரை திரையுலகம் பக்கம் கவனத்தை திருப்பியது.
கடந்த 1991ம் ஆண்டு, தனது 20வது வயதில் தெலுங்கு படத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தமானார். எனினும், அப்படத்தில் இயக்குனர் திடீரென மறைந்துவிடவே, அப்படம் கைவிடப்பட்டது. 1992ல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் அல்டிமேட் ஸ்டார். இப்படத்திற்காக, சிறந்த புதுமுக நடிகர் விருது வாங்கி, முதல் படத்தில் முத்திரை பதித்தார். இதன் பயனாக, தமிழ் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.
தமிழில், 'அமராவதி' படத்தில் அஜித் அறிமுகமானார். 1995இல் வெளியான 'ஆசை' திரைப்படம், அஜித்தின் பக்கம் பல இயக்குனர்களை பார்க்க வைத்தது. இப்படம் தான், அஜித்தின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை தந்தது.
அஜித் கொடுத்த 'ஹிட்ஸ்'!
பின்னர், 'வான்மதி' (1996), 'காதல் கோட்டை' (1996), 'ராசி' (1997), 'உல்லாசம்' (1997), 'காதல் மன்னன்' (1998), 'அவள் வருவாளா' (1998), 'வாலி' (1999), 'ஆனந்த பூங்காற்றே' (1999), 'அமர்க்களம்' (1999), 'முகவரி' (2000), 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' (2000), 'தீனா' (2001), 'சிட்டிசன்' (2001), 'பூவெல்லாம் உன் வாசம்' (2001) உள்ளிட்ட படங் அஜித்தை வெற்றிப்பட நாயகனாக அங்கீகரித்தன.
கடந்த 1999ல் வெளியான அமர்க்களம் படத்தில் நடித்த போது, நடிகை ஷாலியுடன், காதல் மன்னனுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு தற்போது மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் உள்ளனர்.
கார் பந்தய சாம்பியன் அஜித்!
தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியமாக திகழும் அஜித்தை , பீனிக்ஸ் பறவையோடு ஒப்பிட்டு பேசுவதுண்டு. காரணம், சினிமா பின்னணியே இல்லாத குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வந்த அஜித், பல சரிவுகள், பல சோதனைகளை கண்டு, அவற்றை முறியடித்து தன்னை நிலை நிறுத்தியவர். படப்பிடிப்பு சண்டைக்காட்சிகள், பைக் சாகசங்களில் ரிஸ்க் எடுப்பவர். இதனால், அடிக்கடி விபத்துகளை சந்தித்தவர்.
சினிமாவில் நடித்தாலும் பைக், கார் பந்தயங்களை அஜித் விட்டுவிடவில்லை. மும்பை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார்.
ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர் மன்றத்தை கலைத்து அதிரடி!
மூன்று முறை 'ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்', இரண்டு முறை 'சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்', மூன்று முறை 'விஜய் விருதுகளையும்', இரண்டு முறை 'தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்', எனப் பல்வேறு விருதுகளை தன்வசப்படுத்தி இருக்கிறார் நம்ம 'தல'.
'பஞ்ச்' வசனம் பேசாவர்; கண்ணியம் காப்பவர்; பொதுவெளிகளில் ஆர்ப்பாட்டமின்றி, ஆடம்பரமின்றி அமைதி காப்பவர் அஜித். ஆனால், மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர். ரசிகர் மன்றங்கள் வேண்டாம், பட்ட பெயருடன் தன்னை அழைக்க வேண்டாம், மாலை மரியாதை, கட் அவுட்டு பாலாபிஷேகம் செய்யாதீர்கள் என்று ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை பிறப்பித்து, பலருக்கும் முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார்.
வாழ்த்துகள் தல!
அஜித்திற்கு பிடிக்காத விஷயம், தான் செய்யும் உதவி வெளியே தெரிந்துவிடுவதுதான். அது யார் மூலம் தெரிந்தது, எப்படி தெரிந்தது என்று கோபப்படுவாராம். உதவி என்பது, கொடுப்பவருக்கு வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம். ஆனால் அதை வாங்குபவர்க்கு சங்கடத்தை உண்டாக்கும் என்று அஜித் சொல்வாராம்.
'ஆசை' நாயகனாக அறிமுகமாகி, 'காதல் மன்னனாக' உருமாறி 'காதல் கோட்டை' கட்டி 'அமர்க்களம்' செய்த உண்மையான 'சிட்டிசன்' க உருவெடுத்து, திரையுலகில் முடிசூடா மன்னனாக கிரீடம் சூடியுள்ள நம்ம அஜித்தின் வீரம், விவேகம், விஸ்வாசம் இன்று அவரை பல கோடி ரசிகர்களின் உள்ளங்களில் குடியிருக்க வைத்துள்ளது.
உழைத்தால் நிச்சயம் உயரலாம் என்பதற்கு 'வலிமை'யான உதாரணமாக திகழும் அல்டிமேட் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். ஹேப்பி பர்த் டே தல!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu