நடிகர் ஷாருக்கான் அடுத்து நடிகர் சல்மான் கான்… பாலிவுட் பக்கம் அட்லீயின் ஏறுமுகம்

நடிகர் ஷாருக்கான் அடுத்து நடிகர் சல்மான் கான்… பாலிவுட் பக்கம் அட்லீயின் ஏறுமுகம்
X

பாலிவுட் நட்சத்திரங்களை இயக்கும் இயக்குநர் அட்லீ.

அட்லீ, தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். அடுத்து சல்மான் கான் படத்தை இயக்க உள்ளதாக தெரிகிறது.

தமிழ்த் திரையுலகில் இளம் வயதில் அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்து மிகக் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குநர்களின் வரிசையில் இடம் பிடித்தவர் இளம் இயக்குநர் அட்லீ. 'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி லைம் லைட்டுக்கு வந்தவர்.

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய அட்லீ, தான் பிரமாண்ட இயக்குநரிடம் பாடம் கற்றவர் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர் இயக்கும் படங்களிலும் பிரமாண்டமான காட்சிகளை எடுத்து குருநாதரைப் போலவே திரையுலகில் ஸ்கோர் செய்து வருகிறார். பழைய ஹிட் படங்களின் கதைகளை தூசு தட்டி அதை அப்படியே புதிய கோணத்தில் மாற்றி மெருகேற்றி, படம் இயக்குவதில் இயக்குநர் அட்லீ மகா கெட்டிக்காரர் என்று சமூக வலைத்தள ரசிகர்கள் குறிப்பிட்டு விமர்சிப்பது உண்டு.


இந்தநிலையில், தற்போது பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார் இயக்குர் அட்லீ. இப்படத்தில், ஷாருக்கானுடன் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரியாமணி, யோகி பாபு, வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி என முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர், நடிகைகள் பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.

மும்பை, சென்னை என மாறி மாறி 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம், அடுத்த வருடம் ஜூன் மாதம் வெள்ளித் திரையில் வெளியாகிறது என்கிறார்கள் படக்குழுவினர். இந்தநிலையில், 'ஜவான்' படத்தில் நடிகர் விஜய் நடிப்பது குறித்து விரைவில் அப்டேட் ஏதும் வெளியாகலாம் என ரசிகர்கள் எதிரபார்த்துக் காத்திருக்கின்றனர்.


அதேபோல், 'ஜவான்' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் 'தளபதி 68' படத்தை இயக்குநர் அட்லீ இயக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி அத்தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது. நடிகர் விஜய் - இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப் படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், 'ஜவான்', 'தளபதி 68' படங்களுக்குப் பிறகு இயக்குநர் அட்லீ இயக்கும் படத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ளதாகப் புதிய தகவல் கிடைத்துள்ளது. நடிகர் சல்மான் கானுக்கு இயக்குநர் அட்லீ கதை கூறிவிட்டதாகவும், அதற்கு அவரும் ஓகே என்று கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவும் தெரிய வருகிறது. நடிகர் ஷாருக்கானை அடுத்து, நடிகர் சல்மான் கான் என அடுத்தடுத்து பாலிவுட் பக்கம் சூப்பர் ஸ்டார்களுடன் இயக்குநர் அட்லீ கைகோப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.


இயக்குநர் அட்லீ - நடிகர் சல்மான் கான் இணையும் திரைப் படம், 'தளபதி 68'க்குப் பிறகுதான் தொடங்கும் எனவும் இப்போதைக்கு தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது, 'வாரிசு' திரைப் படத்தில் நடித்து வருவதுடன், அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' திரைப்படத்தில் நடிக்கிறார். அதன்பிறகே, இயக்குநர் அட்லீயுடன் நடிகர் விஜய் இணையலாம் எனத் தெரிய வருகிறது. அதற்குள், இயக்குநர் அட்லீ, நடிகர் ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' திரைப்படம் முடிந்துவிட்டால், அடுத்து, 'தளபதி 68' திரைப்படம் உடனே தொடங்கும் என எதிர்பார்க்கலாம். அதேநேரம், நடிகர் சல்மான் கான் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கும் திரைப் படம் நிச்சயமாக பிரமாண்டமான படைப்பாக உருவாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!