நடிகை மீரா மிதுனை கண்டுபிடிக்க முடியவில்லை... நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்..
நடிகை மீரா மிதுன். (கோப்பு படம்).
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதற்கிடையே, அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை துவங்க இருந்த நிலையில், திடீரென விசாரணைக்கு ஆஜராகாமல் நடிகை மீரா மிதுன் தலைமறைவானார். இதையெடுத்து, நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, தலைமறைவாக உள்ள நடிகை மீரா மிதுனை பிடிக்க முயற்சித்து வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவரை கண்டுபிடிக்க போலீஸார் ஆர்வம் காட்டவில்லை என்றும் புகார் எழுந்தது.
இந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீராமிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளதாகவும், அவர் தலைமறைவாக உள்ள இடம் குறித்து எந்த விபரங்களும் கிடைக்கவில்லை என்றும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதாகர் தெரிவித்தார்.
மேலும், நடிகை மீரா மிதுனின் செல்போன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரை கைது செய்ய தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டு வருவதாகவும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதாகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போது, நடிகை மீரா மிதுன் எங்கு இருக்கிறார் என அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தெரியவில்லை என்றும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து காவல் துறையினர் கண்காணித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் சுதாகர் தெரிவித்தார்.
காவல் துறையின் தரப்பு வாதத்தை கேட்டுக் கொண்ட சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
யார் இந்த மீரா மிதுன்?
சென்னையை சேர்ந்த நடிகை மீரா மிதுன் உயிரி தொழில்நுடபத்தில் முதுகலை பட்டம் படித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தென் இந்தியா போட்டியில் பட்டம் வென்றுள்ளார். முதல் முறையாக இந்தப் பட்டத்தை வென்றது நடிகை மீரா மிதுன் தான்.
பின்னர், 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். அதன் பிறகு போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் நடித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பரப்பை ஏற்படுத்தினார் நடிகை மீரா மிதுன். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து பரபரப்பாக காணப்பட்ட நடிகை மீரா மிதுன் தற்போது முற்றிலும் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu