நடிகை எம். எஸ். எஸ். பாக்கியம்
எம்.எஸ்.எஸ்.பாக்கியம் ஒரு தென்னிந்திய தமிழ் திரைப்பட,மேடை நாடக நடிகை மட்டுமல்லாமல் 1945 - 1970 காலப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் குணசித்திர,நகைச்சுவை,வில்லி வேடங்களில் நடித்துள்ளார்.
பாக்கியத்தின் இயற்பெயர் மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்பதாகும்.இவர் 1926 ம் ஆண்டு திருச்சி மருங்காபுரி என்னும் ஊரில் அவ்வூர் சமீன்தாரின் மேலாண்மையாளராகப் பணியாற்றிய நல்லசிவம் பிள்ளை, செல்லம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகளாக மே மாதம் 12ம் தேதி பிறந்தார்.
இவருக்கு ஒன்றரை வயதான போதே தாயார் செல்லம்மாள் இறந்து விட்டார். அதன் பின்னர் செல்லம்மாளின் தாயார் இரு பேத்திகளையும் வளர்த்து வந்தார். மருங்காபுரியில் ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றார். அப்போது பாக்கியத்தின் பாட்டனார் இறக்கவே, பாட்டியால் அவரை மேலும் படிக்க வைக்க முடியவில்லை.அந்த நேரத்தில் வளையாபட்டியில் சடையப்ப கொத்தனார் என்பவர் நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார்.
அக்கம்பனியில் பாக்கியம் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி பெற்றார். அக்கம்பனி மூடப்படவே, இவர் கோட்டயம் பி. கைலாசம் ஐயர் என்பவரிடம் முறைப்படி கருநாடக இசை பயின்றார். அப்போது டி. பி. பொன்னுசாமி பிள்ளையின் நாடகக் கம்பனி பொன்னமராவதிக்கு வந்தது. உடனேயே அக்கம்பனியில் சேர்ந்து கொண்டார் பாக்கியம். அக்கம்பனியின் இழந்த காதல் நாடகத்தில் சரோஜா என்ற பாத்திரத்தில் நடித்தார். கண்டிராஜா இராமாயணம் ஆகிய நாடகங்களிலும் நடித்தார்.
சில காலத்தில் இக்கம்பனி என்னெஸ்கே நாடகக் கம்பனியுடன் இணைக்கப்பட்டதை அடுத்து பாக்கியம் அங்கிருந்து விலகினார். வைரம் அருணாசலம் செட்டியார் "சிறீ ராம பாலகான சபா" என்ற புதிய நாடகக் கம்பனியை ஆரம்பித்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்தார். பாக்கியமும் பாட்டியிடம் அனுமதி பெற்று கம்பனியிலே சேர்ந்தார்.
காரைக்குடி சண்முக விலாசு அரங்கில் நடந்த பக்த சாருகதாசர் நாடகத்தில் நகைச்சுவை வேடமேற்று நடித்தார். தாகசாந்தி நாடகத்தில் கதாநாயகியாகவும், திருமழிகை ஆழ்வார் , குடும்ப வாழ்க்கை , விஜயநகர சாம்ராச்சியம் , செயிண்ட் பிலோமினா ,எதிர்பார்த்தது ஆகிய நாடகங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்தார்.
காரைக்குடி, திருச்சி, திருவாரூர் போன்ற இடங்களில் நாடகங்களை அரங்கேற்றிய வைரம் கம்பனி 1945 இல் சென்னைக்கு வந்து ஓராண்டு தங்கியிருந்து நாடகங்களை நடத்திய போது பாக்கியமும் அவர்களது நாடகங்களில் பங்கேற்று சென்னை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
திருச்சி ஓ. ஆர். பாலு என்பவரின் சிபாரிசில் ஜுப்பிட்டரின் ஒப்பந்த நடிகையானார் பாக்கியம். வித்யாபதி (1946) இவர் நடித்த முதல் திரைப்படம் ஆகும். அதில் நாராயண பாகவதரின் ( எம். என். நம்பியார்) மனைவியாகத் தோன்றி நடித்தார்.
ராஜகுமாரியில் பகுணியாக நடித்தார். தொடர்ந்து கஞ்சன் , அபிமன்யு,மோகினி (காளியம்மாவாக),வேலைக்காரி , கன்னியின் காதலி (மேகலையின் தோழி சிங்காரமாக),விஜயகுமாரி (விசித்ரமாக), கிருஷ்ண விஜயம் உட்பட நான்கு ஆண்டுகளுள் ஜுபிட்டரின் 11 படங்களில் நடித்துப் புகழடைந்தார். ஜுபிட்டரின் ஏக்த ராஜா (இந்தி மர்மயோகி) இந்தித் திரைப்படத்திலும் நடித்தார்.
தூக்கு தூக்கி படத்தில் லலிதாவின் அரண்மனைத் தோழியாக 'பெரும் தேவி' என்ற கதாபாத்திரத்திலும் அன்பே வா படத்தில் பி.டி.சம்பந்தத்தின் மனைவியாகவும் வருவார். பூவும் பொட்டும் படத்தில் நடித்த போது காலமானார்.
1962-ஆம் ஆண்டிலேயே இவர் காலமாகிவிட்டாரென தெரிகிறது.இவரைக் குறித்த மேலதிகத் தகவல் எதுவும் கிடைத்ததில்லை.
இவரது சொந்த வாழ்கையை பற்றி என்றால் எம். எஸ். எஸ். பாக்கியம் 1949 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை, குளிப்பிரையைச் சேர்ந்தவரும், கொழும்பு வணிகருமான இராமநாதன் செட்டியாரின் வளர்ப்பு மகனான எஸ். ஆர். எம். எஸ். லட்சுமணன் செட்டியார் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார். பாக்கியம் திருச்சி வானொலி நிலையத்தினரின் வானொலி நாடகங்களிலும் நடித்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu