வாரிசு படம் சிக்கல் தொடர்பாக ரசிகர்களுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

வாரிசு படம் சிக்கல் தொடர்பாக ரசிகர்களுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
X

சென்னை அருகே தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்.

நடிகர் விஜய், 'வாரிசு' படத்தின் விறுவிறுப்பான பணிகளுக்கிடையே, திடீரென ரசிகர்களையும் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்தார்.

தமிழ்த்திரையுலகின் முன்னணி நாயகனும் பிஸியான நடிகருமான நடிகர் விஜய் தற்போது 'வாரிசு' திரைப்பட பணிகளில் விறுவிறுப்பாக இருக்கிறார். இத் திரைப்படம் வருகிற ஜனவரி(2023) மாதம் பொங்கல் திருநாளில் வெள்ளித்திரையில் வெளியாக இருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில், நேற்று(20/11/2022) சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய், அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதோடு, தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியவை பணிகள் குறித்தும் அறிவுறுத்தியுள்ளார். 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படம் ரிலீஸாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். இது தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் வெளியாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் இந்தப் படம் பொங்கலன்று ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் திடீரென சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளது பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது. இந்த ஆலோசனையில் சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார்.

ஏற்கெனவே, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ரசிகர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஒரு பங்கை மட்டுமே செலவிடுங்கள், தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம், முதலில் குடும்பத்தினரை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ளுங்கள், நற்பணிகளை மேற்கொள்ளும்போது ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும், ஏழை எளிய குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பின்னர் பேசிய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ''தமிழகத்தில் 15 மற்றும் 16 இடங்களில்தான் விஜய் மக்கள் இயக்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரத்தம் கொடை கொடுக்கக் கூடிய இயக்கம் மக்கள் இயக்கம்தான். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என ஒரு நாளைக்கு 40லிருந்து 50 க்கு மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம் கொடுத்து வருகிறார்கள். அதேபோல் ஏழைகளுக்கு உணவு மற்றும் பால் வழங்கும் திட்டத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மேலும், மாவட்டத் தலைவர்கள் அனைவரும், நிர்வாகிகளுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தளபதியுடன் ஒரு முறை போட்டோ எடுத்துக்கொண்டு 47 முறை போட்டோ எடுத்துக் கொண்டதாக சிலர் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். மக்கள் இயக்கத்திற்காக உழைக்க கூடிய எந்தவொரு ரசிகனுடனோ, தொண்டனுடனோ மட்டும்தான் தளபதி விஜய் போட்டோ எடுத்துக் கொள்வார். நடிகர் விஐய்க்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தற்போது, நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது போல் பிற மாவட்ட நிர்வாகிகளுடன் இதேபோல் புகைப்படம் எடுத்துக் கொள்ளப்படும்'' என்று தெரிவித்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!