ரஜினிக்குப் பிடித்த படங்கள்… 'பாபா' மற்றும் 'ஸ்ரீராகவேந்திரா'..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எப்போதுமே ஆன்மீகத்தின் மீதான பற்றுதல் அதிகம். எனவேதான், ஆண்டுக்கொரு முறையாவது இமய மலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்வதைத் தவறுவதில்லை அவர். மேலும், தனக்கு நெருங்கிய வட்டத்தில் ரஜினி பிற விஷயங்களைவிட ஆன்மீக விஷயங்களையேதான் அதிகம் பேசுவார்.
இந்தநிலையில், சென்னையில் நடந்த ஆன்மீகப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி காந்த், "நான் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் என்று சொன்னால், அவை 'பாபா' மற்றும் ' ஸ்ரீராகவேந்திரா' படங்கள்தான்.
'ஸ்ரீராகவேந்திரா' படம் வெளிவந்தபிறகுதான் பலபேருக்கு அவரைப் பற்றி தெரியவந்தது. அதேபோல்தான் மகா அவதாரமான பாபாஜியின் சக்தி பற்றியும். அப்படியொரு யோகி இருக்கிறார் என்பதே அதுவரையில் யாருக்கும் தெரியாது.
'பாபா' படத்தைப் பார்த்தபின்பு பலபேர் இமயமலையில் உள்ள ராணிகேட் குகைக்கு சென்றிருக்கிறார்கள். இது ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது. பரமஹம்ச யோகானந்தா பற்றி நிறைய பேர் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். இன்னும் நிறையப் பேருக்கு அவரைப் பற்றி தெரியாது. சிறுவயதில் இருந்தே அவருக்கு ஒரு சிறப்பு சக்தி இருந்தது. 'பாபா' படத்தில் ஒரு காத்தாடி கைக்கு வரும் காட்சி பாபா குறித்து எழுதிய புத்தகத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டது.
ஒருநாள் காத்தாடி ஒன்று போய்க்கொண்டிருக்கும்போது, யோகானந்தா அவருடைய சகோதரியிடம், அந்த காத்தாடியை என் கைக்கு வர வைக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். "அது எப்படி முடியும்?" என்று அவர் சகோதரி கேட்க, உடனே யோகானந்தா, அந்தக் காத்தாடியையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அந்தக் காத்தாடி அப்படியே தானாக அவர் கைகளில் வந்து விழுகிறது.
ஆனால், அதைப் பார்த்த அவரது சகோதரி, "அது ஏதோ தற்செயலாக வந்து விழுந்தது. எனவே, நீ மறுபடியும் இன்னொரு காத்தாடியை வரவைத்துக் காட்டு பார்க்கலாம் என்றார். இரண்டாவது முறையும் ஒரு காத்தாடி அவரது கைகளில் வந்து விழுந்தது. இதைத்தான் 'பாபா' படத்தில் வைத்திருந்தேன்." என்று ஆன்மீகமும் கலையும் கலந்தபடி பேசினார் ரஜினி காந்த்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu