காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கத் தயாரான நடிகர் ராகவா லாரன்ஸ்

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்.
நடன இயக்குநராக இருந்து முனி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி வெளியாகியது. இந்த நிலையில், அந்தப் படத்தின் இயக்குநர் கதிரேசன், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் கோவையில் ரசிகர்கள் முன்னிலையில் ருத்ரன் திரைப்படத்தை பார்த்தனர்.
மேலும், கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள கே.ஜி திரையங்கில் புதுப்பிக்கப்பட்ட ஒரு திரையை நடிகர் ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கேஜி திரையரங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
கோவையில் புதிய திரையரங்கை நடிகர் ராகவா லாரன்ஸ் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மூன்று வருடங்கள் கழித்து ருத்ரன் படம் மூலம் ரசிகர்களை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் பெற்றோர்களை பிரிந்து இருக்கும் குழந்தைகள் குறித்து நல்ல கருத்து எடுத்துக் கூறப்பட்டு உள்ளது. கொரோனாவிற்கு முன்பு இருந்த மக்களின் மனநிலை தற்போது மாறிவிட்ட சூழலில் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நல்ல கதை இருந்தால் அனைவரும் அதனை வரவேற்பார்கள்.
ருத்ரன் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற போது ஜொர்தாலயா பாடலை கேட்டேன். அப்போது அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அந்த பாடலுக்கு ஆட வேண்டும் என விரும்பி அதனை இயக்குநரிடம் தெரிவித்தேன். தற்போதுள்ள இளைஞர்கள் அவர்களது பாடல்களை youtube போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவர்களது திறமைகளை வெளிகொணர்ந்து வருகிறார்கள்.
ஒரு சிறிய இடைவெளி விட்டு காஞ்சனாவின் அடுத்த பாகத்தை மீண்டும் எடுக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். சந்திரமுகி இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் வாசு பார்த்துக் கொள்கிறார். பலருக்கும் உதவி புரிவதை நான் மட்டும் தான் செய்கிறேன் என கூற முடியாது. பலரும் அதனை செய்கிறார்கள்.
நான் மட்டுமல்லாது அனைத்து நடிகர்களின் சார்பிலும் தான் உதவி செய்து வருகிறேன். ருத்ரனை யாராலும் அழிக்க முடியாது. ருத்ரன் தற்போது ருத்ரதாண்டவத்தை ஆடி வருகிறார். அதற்கு சிவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu