நடிகர் சூர்யாவை இயக்கப்போகும் நடிகர் பிரித்விராஜ்..!

நடிகர் சூர்யாவை இயக்கப்போகும் நடிகர் பிரித்விராஜ்..!
X

பிரித்விராஜ், சூர்யா

மலையாளப் பட உலகின் முன்னணி நாயகனான பிரித்விராஜ், இயக்கப்போகும் படத்தின் நாயகன் நடிகர் சூர்யாவாம்.

மலையாளப் பட உலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நடிகர் பிரித்விராஜ், தனது இயல்பான எளிமையான நடிப்பால் ரசிக, ரசிகையர்களின் மனத்தில் தனித்த ஓர் இடத்தை பிடித்து வைத்திருப்பவர். அதனால்தான், நடிகர் பிரித்விராஜின் படங்கள் வெற்றிக்கான கேரண்டிக்கு உரியது என்கிறார்கள் திரையுலகின் முக்கியத் தயாரிப்பாளர்கள். மேலும், இவரது படங்கள் ரசிகர்களிடையே அபரிமிதமான வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தென்னிந்திய அளவிலும் சிறந்த நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. பல வெற்றிப் படங்களை அவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் கொடுத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. தமிழில் ஜோதிகாவுடன் நடிகர் பிரித்விராஜ் இணைந்து நடித்த, 'மொழி' படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பையும் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது.

நடிகர் பிரித்விராஜ் தொடக்கத்தில், உதவி இயக்குநராகத்தான் திரைத்துறையில் தனது கலைப்பயணத்தைத் தொடங்கினார். கால ஓட்டத்தில் நடிகர் பிரித்விராஜ், 'லூசிபர்' என்கிற படத்தை இயக்கி, அதன் மூலம் தனக்கு இயக்குநர் முகமும் உண்டு என்பதை வெளிச்சப்படுத்திக் காண்பித்தார்.

தன்னுடைய கலைப்பயணத்தில் உதவி இயக்குநராகக் களமிறங்கிய பிர்த்விராஜ், தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதுதான், மோகன்லாலை வைத்து, 'லூசிபர்' என்ற படத்தை இயக்கினார். தன்னுடைய முதல் படத்திலேயே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து தன்னை சிறந்த இயக்குநர்கள் வரிசையில் இணைத்துக் கொண்டார் என்பதுதான் பிரித்விராஜின் திறமையும் சாதனையும் எனலாம்.

தொடர்ந்து இவர் படங்களை இயக்கவேண்டும் என்று அவரது ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், முதல் படத்தில் அழுத்தமான கதையை கொடுத்த இவர், தனது இரண்டாவது படமான, 'ப்ரோ டாடி' படத்தில் காமெடி களத்தை மையமாக கொண்டு படத்தை இயக்கினார். இந்தப் படத்திலும் மோகன்லாலையே இவர் நாயகனாக நடிக்க வைத்தார். படத்தில் மீனா, கல்யாணி, பிரியதர்ஷனுடன் பிர்த்விராஜும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் கதை அனைத்து ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. முன்னதாக, 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமான 'எம்பூரான்' படத்திற்கும் பூஜை போடப்பட்ட நிலையில், அந்தப் படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் 'லூசிபர்' படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இவரது நடிப்பில், 'கோல்ட்', 'பிரம்மம்' என அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்களைக் கவரும் வகையில், உருவாகியுள்ளன. இந்தநிலையில், மீண்டும் இயக்கத்தின் பக்கம் திரும்பியுள்ளார் பிரித்விராஜ்.

பான் இந்தியா படமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் படத்தில் நடிகர் சூர்யா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதான் படத்துக்கான ஹைலைட் தகவல் என்கிறார்கள் கோலிவுட் முக்கியஸ்தர்கள். 'கே.ஜி.எஃப்.' படங்களைக் கொடுத்த ஹம்பாலே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்தப் படத்திற்கு 'டைசன்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'டைசன்' படத்தின் வருகையை சூர்யா ரசிகர்கள் சூடம் ஏற்றி வரவேற்கத் தயாராக உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!