நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்துக்கு தடை..?!

நடிகர் பிரபாஸின் ஆதி புருஷ் படத்துக்கு தடை..?!
X
நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள 'ஆதி புருஷ்' படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

தெலுங்குப் பட உலகின் முன்னணி நாயகனான நடிகர் பிரபாஸுக்கு 'பாகுபலி' படத்துக்குப் பிறகு, அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் 'ஆதி புருஷ்' மிகப்பெரிய வெற்றியையும் பெருவாரியான வரவேற்பையும் பெற்றுத் தரும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், படத்தை வெளியிடக் கூடாது என்றும் அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் எனவும் அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குருவாக இருக்கும் சத்யேந்திரதாஸ் வலியுறுத்தி இருப்பது பெரும் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

புராணக் கதையான ராமாயணத்தை மையப்படுத்தி இந்தியா முழுவதும் இதுவரையில் ஏராளமான படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை இப்படி யாருமே ராமரையோ ராமாயணத்தையோ கொச்சைப்படுத்தவில்லை என பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டமே வெடித்துள்ளது. 'ஆதி புருஷ்' படத்தில் ராமராக நடித்துள்ள நடிகர் பிரபாஸ், அண்மையில் செங்கோட்டையில் நடந்த தசரா விழாவில் கலந்து கொண்டு ராவண பொம்மையை அம்பு விட்டு அழித்த சம்பவம் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஒரு பக்கம் 'ஆதி புருஷ்' படத்திற்கு நடிகர் பிரபாஸ் அமோகமான புரமோஷன்களை செய்துவரும் நிலையில், மறுபக்கம் அந்தப் படத்திற்கு எதிராக ட்ரோல்களும், படத்தையே தடை செய்ய வேண்டும் என்கிற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. படத்தின் டீசர் வெளியான நிலையில், அதனை பெருவாரியாக நாடு முழுவதும் பிரபாஸின் ரசிகர்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, படத்திற்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என நினைத்த சில பிரபலங்கள், உங்கள் மொபைல் போனில் பார்த்தால், 'ஆதி புருஷ்' படம் நன்றாக இருக்காது. படத்தை 3டியில் பார்த்தால், அதன் எக்ஸ்பீரியன்ஸே வேற லெவல்ல இருக்கும் என 'ஆதி புருஷ்' படத்துக்கு ஆதரவாகப் பரவலான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், மறுபக்கம் 'ஆதி புருஷ்' டீசர் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதைத்தாண்டி ராமரையே இயக்குநர் ஓம் ராவத் மற்றும் பிரபாஸ் படக்குழுவினர் அவமதித்து விட்டனர். இதை பார்க்க ராமாயணம் போலத் தெரியவில்லை. இஸ்லாமியர்களின் கதைபோலத் தெரிகிறது என மிகப் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

முக்கியமாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தை திரையரங்குகளில் வெளியிடக் கூடாது. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலுவாக முன் வைத்துள்ளது. ராமர், ஹனுமன், ராவணன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை படத்தில் காட்டிய விதம் மிகவும் தவறான அணுகுமுறை என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் தலைமை குருவான சத்யேந்திர தாஸ், 'ஆதி புருஷ்' படத்திற்கு எதிரான தனது கண்டனத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். 'தன்ஹாஜி' படத்தை இயக்கிய இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' திரைப்படத்தில் ராமர் மற்றும் ஹனுமனை தவறாக சித்திரித்துள்ளனர் எனவும் அவர் திடமாகக் கண்டித்துள்ளார்.

அடுத்த ஆண்டு(2023) பொங்கல் திருநாளை முன்னிட்டு படத்தை திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இப்படியொரு பெரிய சிக்கல் 'ஆதி புருஷ்' படத்திற்கு எழுந்துள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!