நடிகர் கார்த்தியின் 'சர்தார்' சக்சஸ் சந்திப்பு..!

நடிகர் கார்த்தியின் சர்தார் சக்சஸ் சந்திப்பு..!
X

சென்னையில் கொண்டாடப்பட்ட 'சர்தார்' படத்தின் வெற்றிவிழாவிவ் பேசிய நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து தீபாவளித் திரைப்படமாக வெளியான 'சர்தார்' படத்தின் வெற்றிவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

ஒரு காலத்தில், ஐம்பது நாள்… நூறு நாள்… நூற்றியிருபத்தைந்தாவது நாள்… நூற்றியைம்பதாவது நாள்… நூற்றியெழுபத்தைந்தாவது நாள்… இருநூறாவது நாள்… என்றெல்லாம் திரைப்படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டங்கள் கொண்டாடிய காலங்கள் கடந்துபோய் பல ஆண்டுகள் ஆகிப்போயின. தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்ற காலத்தில் படத்தின் முதல் நாள்… இரண்டாவது நாள்.. என்று ஒற்றை இலக்க நாட்களை வெற்றிக் கொண்டாட்ட நாட்களாக கொண்டாடும் காலமாக இக்காலம் மாறிப்போனது.

அப்படித்தான், தீபாவளியன்று வெள்ளித்திரையில் வெளியான நடிகர் கார்த்தி நாயகனாக நடித்த 'சர்தார்' படம் வெளியாகி ஐந்தாறு நாட்கள் கடந்த நிலையில் இப்படத்துடன் வெளியான நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த 'பிரின்ஸ்' உள்ளிட்ட பிற படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு வசூலில் முந்திச்சென்று சாதனை படைத்து வருகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், சென்னையில் 'சர்தார்' படத்தின் சக்சஸ் சந்திப்பு வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படும் என்று நம்பிக்கையுடன் அறிவித்தார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியான 'விருமன்' திரைப்படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' மற்றும் தீபாவளி வெளியீடாக வெள்ளித்திரையில் வெளியான 'சர்தார்' ஆகிய மூன்று படங்களும் தொடர்ந்து வணிக ரீதியான வெற்றியை ஈட்டித் தந்துள்ளன. இந்த மூன்று படங்களில் நடிகர் கார்த்தி இரண்டு படங்களில் நாயகனாகவும் இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் படத்தின் கதையை நகர்த்திச் செல்லும் முக்கியக் கதாபாத்திரமான வந்தியத் தேவன் என்னும் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

'சர்தார்' திரைப்படம், இதுவரை நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வெளியான படங்களில் நீண்டகாலத் தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் இப்படமாகும். இந்தப் படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து கார்த்தி அசத்தியிருப்பார். நடிகர் கார்த்தியின் நடிப்பால் அவர் ஏற்ற இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனத்தில் ஆழப் பதிந்து உற்சாகத் துள்ளலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், தீபாவளிக்கு திரைக்கு வந்த 'சர்தார்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் வெற்றிவிழாவை நேற்று(25/10/2022) சென்னையில் உள்ள தி.நகர் ஜி.ஆர்.டி கிராண்ட் ஹோட்டலில் படத் தயாரிப்புத் தரப்பில் நடத்தப்பட்டது. இந்த வெற்றி விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மண், இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், படத் தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன்.பார்த்திபன், சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'சர்தார்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, ''இந்த 'சர்தார்' படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம்,'சர்தார்' படத்தின் இரன்டாம் பாகம் விரைவில் உருவாகும்'' என்று உற்சாகமாக அறிவித்தார். நடிகர் கார்த்தியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!